பூதலூர் காவிரி கரையோர பகுதிகளில் இறால் பண்ணைகள் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு


பூதலூர் காவிரி கரையோர பகுதிகளில் இறால் பண்ணைகள் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 24 Sep 2020 3:27 AM GMT (Updated: 24 Sep 2020 3:27 AM GMT)

பூதலூர் காவிரி கரையோரம் பகுதிகளில் இறால் பண்ணைகள் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதனால் நிலத்தடி நீர் பாதிக்கும் என்றும் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா பாதிரக்குடியை சேர்ந்த கிராம மக்கள் சார்பில் வக்கீல் ஜீவக்குமார் தலைமையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகானந்தம், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் காந்தி, விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ரெங்கராஜ், கிராம மக்கள் சார்பில் சம்சுதீன், வக்கீல் சேகர் ஆகியோர் முன்னிலையில் கிராம மக்கள் சார்பில் கலெக்டர் கோவிந்தராவிடம் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டம் கல்லணையில் காவிரி கரையோரம் இறால் பண்ணைகள் அமைக்கும் பணி தனி நபர்களால் தீவிரமாக நடந்து வருகிறது. நன்னீரில் இறால் வளர்க்கப்போவதாக அவர்கள் கூறினாலும் பல இடங்களில் நன்னீரில் இறால் வளர்ப்பதாக கூறி அமைக்கப்பட்ட பண்ணைகள் சுற்றுச்சூழலுக்கும், இயற்கைக்கும் பெரும் சவாலாக மாறி உள்ளன.

தீங்கு ஏற்படும்

சுற்றுச்சூழல் நீரியியல் நிபுணர்களும் நன்னீர் இறால் பண்ணைகளால் கெடுதல்கள் வரும் என கூறுகின்றனர். கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக்கால்வாய் உள்ளிட்ட ஆறுகள் பிரிகின்றன. சுமார் 10 லட்சம் மக்களின் குடிநீர் தேவையையும், மக்களின் உணவுத்தேவையையும் இவை பூர்த்தி செய்கின்றன.

கல்லணையில் அதன் முகத்துவாரத்தில் அமைக்கப்படும் இந்த நன்னீர் இறால் பண்ணை தனிப்பட்ட சிலருக்கு லாபம் தரலாமே தவிர ஒட்டுமொத்த சமூகத்திற்கு பின்னாளில் தீங்கு உருவாக்கும்.

தடுத்து நிறுத்த வேண்டும்

இதனால் சுற்றுச்சூழல், குடிநீர், பாசனம், நிலத்தடி நீர் எல்லாவற்றுக்கும் ஆபத்தாக விளங்கும். ஆக்சிஜன் அளவு குறையும், நன்னீரில் வாழும் இயற்கையான மீன் வகைகள் பாதிப்புக்குள்ளாகும் சுற்றுப்புறத்தில் வசிக்கும் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.மேலும் இறால் பண்ணை அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்தும் கேட்கவில்லை. எனவே இறால் பண்ணை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story