அரக்கோணம் பஸ் நிலையத்தில் பயங்கரம்: ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை - பயணிகள் அலறியடித்து ஓட்டம்
அரக்கோணம் பஸ் நிலையத்தில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வாலிபர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள பழனிபேட்டை டில்லியப்பன் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். அவரது மகன் கோகுல் (வயது 27). இவர், நேற்று மதியம் 1.30 மணி அளவில் அரக்கோணம் புதிய பஸ் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் திடீரென கோகுலை அரிவாளால் வெட்டினர். ரத்தம் சொட்ட சொட்ட அய்யோ... அம்மா... காப்பாற்றுங்கள் என மரண ஓலமிட்டபடி உயிருக்கு பயந்து ஓடினார். தொடர்ந்து ஓட ஓட விரட்டி மர்ம நபர்கள் கோகுலின் தலையில் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டதும் பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கோகுல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள கடைகளின் வெளியே வைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து கொலையாளிகள் யார்? என்பது குறித்தும், மேலும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் வாலிபர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story