வேலூர், திருவண்ணாமலையில், 3 பெண்கள் உள்பட 9 பேர் கொரோனாவுக்கு பலி
வேலூர், திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
வேலூர்,
வேலூரில் உள்ள தனியார், அரசு மருத்துவமனைகளிலும், திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் கொரோனாவினால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சை பெற்று வந்த 9 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அவர்கள் விவரம் வருமாறு:-
வேலூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணா (வயது 55). இவர் கடந்த மாதம் 25-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று கோபிகிருஷ்ணா உயிரிழந்தார்.
இதேபோன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்ட சத்துவாச்சாரியை சேர்ந்த ஜெயம்மாள் (80) கடந்த 8-ந் தேதியும், பழைய காட்பாடியை சேர்ந்த பாபு (62) மற்றும் குடியாத்தம் அருகேயுள்ள நெல்லூர்பேட்டையை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (79) ஆகியோர் கடந்த 18-ந் தேதியும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 3 பேரும் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார்கள்.
கொரோனா தொற்றுக்கு இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பத்தூர் அங்கநாத வலசையை சேர்ந்த சீனிவாசன் (65), திருவண்ணாமலை மாவட்டம் ஒண்ணுபுரத்தை சேர்ந்த கன்னையன், கலசபாக்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி ஜெயமணி (64) ஆகியோரும் நேற்று உயிரிழந்தனர். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த 65 வயது முதியவர் மற்றும் 86 வயது மூதாட்டி ஆகியோரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
நேற்று ஒரேநாளில் மட்டும் 3 பெண்கள் உள்பட 9 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story