வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட பேரிடர் மேலாண்மை சாா்பில் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கி பேசினார் அப்போது அவர் பேசியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது நீர்நிலைகளால் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளாக 75 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளை கண்காணித்திட முதன்மை அலுவலர்கள், பல்வேறு பணிகளை மேற்கொள்ள துறை சார்ந்த மண்டல குழு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தாசிதார்கள் தங்கள் பகுதியில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்து பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் பேரிடர்கால நிவாரண மையங்களை ஆய்வு செய்து அந்த மையத்தில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய தயார் நிலையில் வைத்திட வேண்டும். பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் நபர்களுக்கு நிவாரணங்கள் வழங்கிட தயார் நிலையில் இருக்க வேண்டும். பொது விநியோக திட்டத்தில் உள்ள பொருட்களை இருப்பு வைத்திருக்க வேண்டும்.
செயற் பொறியாளர்கள், பொதுப்பணித்துறை, நீர்பாசனம் மற்றும் கட்டிடம் நீர்ஆதாரங்களை தொடர்ந்து கண்காணித்து தேவையான இடங்களில் மணல், காலி கோணிப்பைகள், சவுக்கு கட்டைகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும். பொது மக்கள் தங்க வைக்கப்படும் நிவாரண மைய கட்டிடங்கள், கல்யாண மண்டபங்கள் மற்றும் அனைத்து அரசு கட்டிடங்களின் உறுதித்தன்மை, தேவையான குடிநீர் மற்றும் மின்சார வசதிகள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நெடுஞ்சாலை துறை சார்பில் காற்றினால் சாலையில் விழும் மரங்கள் மற்றும் கிளைகளை உடனுக்குடன் அகற்றிட தேவையான பொக்லைன் எந்திரத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நகராட்சி மற்றும் ஊராட்சி அலுவலர்கள் வலுவிழந்துள்ள ஏரிகரைகள் மற்றும் மதகுகளை கண்டறிந்து பழுது பார்க்க வேண்டும்.
மழைகாலங்களில் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிகளின் நீர் அளவை கண்காணித்துவர வேண்டும். மேலும் கழிவுநீர் வாய்கால்கள் அடைப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சுகாதார துறையின் மூலம் ஆம்புலன்ஸ் வாகனங்கள், மருத்துவ குழுக்கள், அனைத்து வட்டங்களிலும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும், தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்களை தயார் நிலையில் இருப்பில் வைத்துகொள்ள வேண்டும்.
கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் கால்நடை மருந்தகங்களில் தயார் நிலையில் வைத்திட வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு தாழ்வாக செல்லும் மின் வயர்களை மாற்றியும், பழுதடைந்துள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை கண்டறிந்தும் உடனடியாக சரிசெய்திட வேண்டும்.
வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தொடர்பு கொள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தினை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04175-232377 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர், வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story