வேலூர் அருகே, வீடுகளில் புகுந்து கத்திமுனையில் 10 பவுன் நகை கொள்ளை - முகமூடி கும்பலுக்கு வலைவீச்சு
வேலூர் அருகே வீடுகளில் புகுந்து கத்தி முனையில் 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
வேலூர்,
வேலூரை அடுத்த அரியூர் அருகேயுள்ள செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 45), போர்வெல் தொழிலாளி. இவருடைய மனைவி பானு (40). இவர்களின் வீடு கிராமத்தில் இருந்து சிறிது தொலைவில் விவசாய நிலப்பகுதியில் அமைந்துள்ளது. ஆடு, மாடுகள் வளர்த்து வந்ததால் அவற்றை வீட்டின் பின்பகுதியில் இவர்கள் கட்டி வைத்திருந்தனர். கணேசன் நேற்று முன்தினம் இரவு மாடுகளுக்கு தீவனம் வைத்துவிட்டு பின்பக்க கதவை தாழ்ப்பாள் போடாமல் வைத்திருந்துள்ளார். இந்த நிலையில் முகமூடி அணிந்த 3 பேர் திடீரென பின்பக்க வாசல் வழியாக வீட்டிற்குள் நுழைந்தனர்.
அவர்கள் கத்தி, அரிவாளை காட்டி மிரட்டி பானு அணிந்திருந்த தாலிச்சரடு மற்றும் வீட்டில் இருந்த நகைகள் என்று 7 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். மேலும் அவர்களை சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
மேலும் அதே கிராமத்தில் உள்ள கட்டிட மேஸ்திரி ராஜீவ்காந்தி (30) என்பவரின் வீட்டிற்குள் முகமூடி கும்பல் நுழைந்தனர். அந்த குடும்பத்தினரிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி 3 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
அதைத்தொடர்ந்து அருகே வசிக்கும் வில்வநாதன் (70) வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைக்க முயன்றனர். சத்தம் கேட்டு விழித்த வில்வநாதன் திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். அதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.3 லட்சமாகும்.
இது குறித்து பானு, ராஜீவ்காந்தி ஆகியோர் அரியூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுபா மற்றும் போலீசார் அங்கு சென்று 3 குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அந்த வீடுகளுக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் கைரேகை மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
செம்பேடு கிராமத்தில் முகமூடி கும்பல் கத்தி முனையில் 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story