துணைநிலை நீர் மேலாண்மை திட்டத்திற்கு ரூ.4½ கோடி ஒதுக்கீடு - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
சிவகங்கை மாவட்டத்திற்கு துணைநிலை நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ரூ.4 கோடியே 54 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கனவே நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.3 கோடியே 33 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் ஆயிரத்து 105 ஏக்கர் பரப்பளவில் சொட்டு நீர் பாசனம் அமைத்தல், தெளிப்பு நீர் பாசனம் அமைத்தல் மற்றும் மழைதூவான் அமைத்தல் போன்ற பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது இந்த திட்டத்துடன் இணைந்து துணைநிலை நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ரூ.4 கோடியே 54 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நுண்ணீர் பாசன திட்டத்தில் பயன்பெற்ற விவசாயிகள் தங்கள் நிலங்களில் ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கு ரூ.25 ஆயிரம், மின்சாரம் அல்லது டீசல் பம்பு வாங்குவதற்கு ரூ.15 ஆயிரம், தரை நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கு ரூ.40 ஆயிரம் அல்லது இவைகளுக்காக 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.
இதுதவிர இந்த திட்டங்களில் பயன்பெற மற்ற விவசாயிகளும் மற்றும் 7 வருடங்களுக்கு முன்பு இந்த திட்டத்தில் பயன்பெற்ற விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நிலத்தின் அடங்கல் நகல் , புலவரைபடம், ஆதார்கார்டு நகல், குடும்ப அட்டை, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவைகளுடன் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் நுண்ணீர் பாசன திட்டத்தை பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள் அத்துடன் துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தையும் சேர்த்து செய்ய வேண்டும்.
எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இந்த திட்டத்தில் பதிவு செய்து தண்ணீர் சிக்கனத்தை கடைப்பிடித்து குறைந்த அளவு தண்ணீரை கொண்டு அதிகமான பரப்புகளில் பயிர் சாகுபடி செய்து கூடுதல் மகசூல் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story