பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து: போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - 13 பணிமனைகளில் நடந்தது
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் 13 பணிமனைகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை எண் 1-ன் முன்பு நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் மண்டல அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் ரகோத்தமன், மறுமலர்ச்சி தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் மனோகரன், அறிவர் அம்பேத்கர் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் கணேசன், நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்க பொருளாளர் குபேரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொ.மு.ச. பொதுச்செயலாளர் பிரபாதண்டபாணி விளக்கவுரையாற்றினார்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், போக்குவரத்து கழகங்களை சீர்குலைக்கும் முயற்சியான சட்டத்திருத்தம் 288 ஏ-வை ரத்து செய்ய வேண்டும், கொரோனா தடை காலங்களில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களை மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் புதிய வேளாண்மை மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தொ.மு.ச. நிர்வாகிகள் சந்திரசேகரன், பெருமாள், ரவிச்சந்திரன், மனோகரன், ராஜேந்திரன், சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் மூர்த்தி, இளம்பாரதி, ஏழுமலை, குணசேகரன், மறுமலர்ச்சி தொழிலாளர் சங்க நிர்வாகி ரவி, அறிவர் அம்பேத்கர் தொழிலாளர் சங்க நிர்வாகி ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தொ.மு.ச. அமைப்பு செயலாளர் வேலு நன்றி கூறினார்.
இதேபோல் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை எண் 2, 3, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திருக்கோவிலூர், திண்டிவனம், கள்ளக்குறிச்சி பணிமனை எண் 1, 2, சின்னசேலம், சங்கராபுரம், புதுச்சேரி, கோயம்பேடு ஆகிய பணிமனைகளிலும் அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story