தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை முடிவுகளை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பும் வசதி - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்


தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை முடிவுகளை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பும் வசதி - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Sept 2020 4:45 AM IST (Updated: 25 Sept 2020 12:24 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை முடிவுகளை எஸ்.எம்.எஸ். மூலம் உடனுக்குடன் அனுப்பும் வசதியை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீன நீராவி எந்திரத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.சண்முகநாதன், பி.சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, நவீன நீராவி சலவை எந்திரத்தை திறந்து வைத்தார்.

மேலும், கொரோனா பரிசோதனை முடிவுகளை எஸ்.எம்.எஸ். மூலம் உடனுக்குடன் அனுப்பும் வசதியையும் அவர் தொடங்கி வைத்தார். மருத்துவ சுகாதார பணியாளர்கள் 170 பேருக்கு சிறப்பு சீருடைகளை வழங்கிய அமைச்சர், சிறப்பாக பணியாற்றிய மருத்துவ ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூட தமிழக முதல்வரை பாராட்டி உள்ளார்.

பிரதமருடனான ஆய்வுக்கூட்டம் காரணமாக தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி நடைபெறுவதாக இருந்த முதல்வரின் ஆய்வுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் அதாவது அக்டோபர் 1 அல்லது 3-ந் தேதி தமிழக முதல்வர் தூத்துக்குடி வருவார். அன்றைய தினம் பல்வேறு திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைப்பார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 1 லட்சத்து 55 ஆயிரத்து 143 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் மொத்தம் 1,212 படுக்கைகள் உள்ளன. இதில் 700 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 171 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள். 550 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை. 82 வெண்டிலேட்டர் வசதி கொண்டவை. 63 உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவி வசதி கொண்டவை ஆகும். தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கை காரணமாகவே தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா இறப்பு விகிதம் தமிழகத்திலேயே குறைவாக 0.67 சதவீதமாக உள்ளது.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி தமிழக அரசை பாராட்டியதையே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குறை கூறியுள்ளார். அவர் எதிர்க்கட்சி தலைவர் அல்ல. எதிரி கட்சி தலைவர். எதிர்க்கட்சி தலைவர் என்றால் நல்லதை பாராட்ட வேண்டும். குறைகள் இருந்தால் சுட்டிக்காட்ட வேண்டும். அதைவிடுத்து ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் குறை கூறி வருகிறார். இதன்மூலம் இதிலும் அவர் அரசியல் செய்கிறார் என்பது பகிரங்கமாக தெரியவருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story