செங்கம் அருகே, விவசாயி வெட்டிக்கொலை - குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போலீசாருடன் வாக்குவாதம்


செங்கம் அருகே, விவசாயி வெட்டிக்கொலை - குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போலீசாருடன் வாக்குவாதம்
x
தினத்தந்தி 24 Sep 2020 11:00 PM GMT (Updated: 2020-09-25T01:30:42+05:30)

செங்கம் அருகே விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கம், 

செங்கத்தை அடுத்த மேல்புழுதியூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 51), விவசாயி. அவருடைய மனைவி வசந்தா (48). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் நடராஜன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று காலை நடராஜன் அவரது விவசாய நிலத்தில் கழுத்துப்பகுதியில் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்கம் போலீசார் சென்று, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது நடராஜனின் உறவினர்கள் உடலை எடுக்கவிடாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி கோரிக்கை வைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து கலால் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமரன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செங்குட்டுவன் ஆகியோர் நடராஜனின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் அங்கு சென்று, குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதைத் தொடர்ந்து போலீசார் நடராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story