அல்லேரி மலைப்பகுதியில் சுற்றுப்பயணம்: “சமூக விரோத செயல்களில் ஈடுபடாமல் இருக்க குழந்தைகளை படிக்க வையுங்கள்” - போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
அல்லேரி மலைப்பகுதியில் சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க குழந்தைகளை படிக்க வையுங்கள் என்று 30 குடும்பத்தினருக்கு உணவுப்பொருட்களை வழங்கி போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பேசினார்.
அணைக்கட்டு,
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்து அல்லேரி மலைப்பகுதிகளில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்த அணைக்கட்டு போலீசார் கடந்த மாதம் அப்பகுதிக்கு சென்றனர். விழிப்புணர்வு கூட்டத்தை முடித்து விட்டு கொல்லிமலை பகுதிக்கு போலீசார் செல்லும்போது அப்பகுதியைச் சேர்ந்த சாராய கும்பல் அவர்களை மடக்கி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர் இந்த கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் சுமார் 120-க்கும் மேற்பட்டோர் அல்லேரிமலைக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது சாராய கும்பலைச் சேர்ந்த கணேசன் மற்றும் துரைசாமி ஆகிய 2 பேர் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் சரண் அடைந்தனர். மேலும் 11 பேர் அணைக்கட்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக செல்வகுமார் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு அல்லேரிமலைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
நேற்று இந்த மலைக்கு இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டு அப்பகுதி பொதுமக்களை சந்தித்து சுமார் 30 குடும்பத்தினருக்கு அரிசி, கோதுமை, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கினார். அப்போது அவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பேசியதாவது:-
உங்களுக்கு அரசு வழங்கும் நல திட்டங்களை உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் உங்கள் வாழ்வாதாரத்துக்கு ஆடு மாடு ஆகியவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்படும். சாலை வசதி இல்லாத பகுதிகளுக்கு சாலை வசதியை ஏற்படுத்தி தரப்படும். சமூக விரோத செயல்களில் ஈடுபடாமல் இருக்க நீங்கள் உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆய்வின்போது வேலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் சமூக திட்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story