கொப்பல் அருகே துணிகரம்: கர்நாடக கிராமிய வங்கியில் ரூ.1½ கோடி நகை, பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


கொப்பல் அருகே துணிகரம்: கர்நாடக கிராமிய வங்கியில் ரூ.1½ கோடி நகை, பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Sep 2020 11:15 PM GMT (Updated: 2020-09-25T02:56:03+05:30)

கொப்பல் அருகே, கர்நாடக கிராமிய வங்கியில் ரூ.1½கோடி மதிப்பிலான தங்கநகைகள், வெள்ளி பொருட்கள், பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கொப்பல்,

கொப்பல் மாவட்டம் எலபுர்கா அருகே உள்ளது பெவோரா கிராமம். இந்த கிராமத்தில் கர்நாடக அரசுக்கு சொந்தமான பிரகதி கிருஷ்ணா கிராமிய வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலை முடிந்ததும் வங்கி ஊழியர்கள், வங்கியை பூட்டிவிட்டு வீடுகளுக்கு சென்று விட்டனர். அந்த வங்கியில் இரவு நேர காவலாளிகள் யாரும் இல்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் நள்ளிரவில் வங்கிக்கு வந்த மர்மநபர்கள், கியாஸ் கட்டரை பயன்படுத்தி வங்கியின் இரும்பு கதவை வெட்டினர். பின்னர் வங்கிக்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களின் ஹார்டு டிஸ்க்குகளையும் எடுத்தனர்.

பின்னர் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்த மர்மநபர்கள் அதில் வைக்கப்பட்டு இருந்த தங்கநகைகள், வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை வங்கியின் இரும்பு கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வங்கியின் மேலாளருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மேலாளர் உடனடியாக வங்கிக்கு விரைந்து வந்து பார்த்தார்.

அப்போது வங்கிக்குள் இருந்த ஆவணங்கள் சிதறி கிடந்தன. மேலும் பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த தங்கநகைகள், பணம், வெள்ளி பொருட்கள் மாயமாகி இருந்தது. இதுபற்றி வங்கி மேலாளர், எலபுர்கா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த எலபுர்கா போலீசார் வங்கி மேலாளரிடம் விசாரித்தனர். அப்போது ரூ.1½ கோடி மதிப்பிலான தங்கநகைகள், வெள்ளி பொருட்கள், பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து வங்கிக்கு வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்கள், வங்கியில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். மேலும் அவற்றை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சம்பவம் நடந்த வங்கிக்கு வந்த மோப்ப நாய், வங்கியில் இருந்து சிறிது தூரம் மோப்பம் பிடித்து ஓடி நின்றது. ஆனால் அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இந்த நிலையில் சம்பவம் நடந்த வங்கிக்கு வந்த கொப்பல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, கொள்ளை சம்பவம் குறித்து வங்கி மேலாளர், போலீசாரிடம் தகவல்களை கேட்டு பெற்றுக்கொண்டார். மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படையும் அமைத்து அவர் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து எலபுர்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். வங்கியில் ரூ.1½ கோடி தங்கநகைகள், பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கொப்பல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story