கொரோனா காலத்தில் போராட்டமா? கவர்னர் கிரண்பெடி கருத்து


கொரோனா காலத்தில் போராட்டமா? கவர்னர் கிரண்பெடி கருத்து
x
தினத்தந்தி 25 Sept 2020 4:23 AM IST (Updated: 25 Sept 2020 4:23 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா காலகட்டத்தில் காங்கிரஸ் சார்பில் வருகிற 28-ந்தேதி போராட்டம் அறிவித்து இருப்பது குறித்து கவர்னர் கிரண்பெடி கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் வருகிற 28-ந்தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியிலும் இந்த போராட்டத்தை நடத்த இருப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.

கொரோனா வேகமாக பரவிவரும் இந்த காலகட்டத்தில் போராட்டம் என்ற பெயரில் கூட்டம் கூடுவதால் தொற்று அதிகமாக பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உள்துறை அமைச்சகம், மற்றும் கவர்னர் கிரண்பெடிக்கு அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கடிதம் அனுப்பினார்.

அதில், ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சரே பேரிடர் காலத்தில் இதுபோன்று போராட்டம் அறிவித்து இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம் தொடர்பாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

அன்பழகன் எம்.எல்.ஏ. சொல்வது சரியானது. தொற்று பரவுவதை தடுக்க நாம் கடுமையாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். ஒருமுறை நாம் விட்டுவிட்டோம் என்றால் மீண்டும் அது கடினமாகிவிடும். புதுவையில் இறப்பு விகிதம் என்பது அதிகமாக உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இதற்காக கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இந்திய மருத்துவ கழகக்குழு, சட்ட அமலாக்கம், களப்பணியாளர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி. சுய உதவி குழுக்களை சேர்ந்தவர் கள், தன்னார்வலர்கள் வீடுவீடாக சென்று கொரோனா அறிகுறி உள்ளவர்களை பரிசோதனைக்கு அழைத்து வருகிறார்கள்.

அதில் ஒருவர் தாமதமாக வந்தாலும் இறப்பு விகிதம் அதிகரித்து விடுகிறது. இந்த காலகட்டத்தில் போராட்டங்கள் பாதிப்பினை அதிகரித்துவிடும். கொரோனா பரிசோதனை, சிகிச்சைக்காக கடன் வாங்கி செலவழித்து வருகிறோம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. தொற்று அதிகரிப்பு என்பது பட்ஜெட் செலவினை அதிகரிக்கும்.

இந்த காலகட்டத்தில் போராட்டத்தை தவிர்க்கவேண்டும் என்ற எம்.எல்.ஏ.வின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். வேறு எந்த ஆலோசனையிலும் நான் எதுவும் சொல்லவில்லை. அது அவரது பார்வையாகும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து புதுவை, காரைக்காலில் மத்திய அரசின் 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற உள்ளதாக அறிகிறேன்.

மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பேக்ஸ் மூலம் ஒரு தகவல் வந்துள்ளது. அதில் கொரோனா காலத்தில் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளது. நீங்கள் புதுச்சேரி மாநில முதல்-அமைச்சராகவும், பேரிடர் மேலாண்மை துறையின் தலைவராகவும் உள்ளீர்கள். பேரிடர் மேலாண்மை துறையின் சட்டம் நன்றாக தெரியும். தேசிய அளவிலான வழிகாட்டுதலும் உங்களுக்கு நன்றாக தெரியும். இதனை புதுவையில் நடைமுறைப் படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story