மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற விவசாயி விஷம் குடித்தார் போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை


மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற விவசாயி விஷம் குடித்தார் போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை
x
தினத்தந்தி 25 Sept 2020 8:00 AM IST (Updated: 25 Sept 2020 8:00 AM IST)
t-max-icont-min-icon

திருமக்கோட்டை அருகே மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற விவசாயி விஷம் குடித்தார். போலீஸ் பாதுகாப்புடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருமக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள வடக்கு தென்பரை வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்சாமி(வயது 65). விவசாயியான இவருடைய மனைவி மாரியம்மாள்(57). இவர்களுக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 4 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. மகன் பிரபாகரனுக்கு(27) இன்னும் திருமணம் ஆகவில்லை.

பிரபாகரன் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு சமீபத்தில் ஊருக்கு வந்து உள்ளார். பால்சாமி, மாரியம்மாள் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அரிவாளால் வெட்டிக்கொலை

இந்த நிலையில் நேற்று மாலை அந்த பகுதியில் பத்துகட்டு வாய்க்கால் அருகே உள்ள வயல் பகுதியில் மாரியம்மாள் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் பால்சாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த பால்சாமி, அரிவாளால் தனது மனைவி மாரியம்மாளின் கழுத்தில் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து இறந்தார்.

ஆத்திரத்தில் மனைவியை அரிவாளால் வெட்டி விட்டோமே என்ற அதிர்ச்சியில் பால்சாமி வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை

அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

விவசாயி ஒருவர் தனது மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்று விட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது திருமக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story