தேன்கனிக்கோட்டை அருகே அ.தி.மு.க. கொடி கம்பத்தை சேதப்படுத்திய ஊராட்சி செயலாளர் கைது


தேன்கனிக்கோட்டை அருகே அ.தி.மு.க. கொடி கம்பத்தை சேதப்படுத்திய ஊராட்சி செயலாளர் கைது
x
தினத்தந்தி 25 Sep 2020 3:38 AM GMT (Updated: 25 Sep 2020 3:38 AM GMT)

தேன்கனிக்கோட்டை அருகே அ.தி.மு.க. கொடி கம்பத்தை சேதப்படுத்திய ஊராட்சி செயலாளரை போலீசார் கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குந்துகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஹேமந்த் என்ற சீனிவாசன் (வயது 27). இவர் ஊராட்சி மன்ற செயலாளராக இருந்து வருகிறார். இந்தநிலையில் அவர் தனது நண்பர்களான ஓசூரை சேர்ந்த மஞ்சு, அருண் ஆகியோருடன் சேர்ந்து அவரது தோட்டத்தில் மது குடித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் குடிபோதையில் இருந்த அவர்கள் 3 பேரும் குந்துகோட்டை கிராமத்துக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த அ.தி.மு.க. கொடி கம்பத்தின் பெயர் பலகை மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவம் பதித்த பீடத்தை உடைத்து நொறுக்கினார்கள். மேலும் கொடி கம்பத்தையும் சேதப்படுத்தினார்கள். இதை தட்டி கேட்ட கிராம மக்களையும் மிரட்டினார்கள்.

ஊராட்சி செயலாளர் கைது

இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் நாகராஜ் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் விசாரணை நடத்தி அ.தி.மு.க. கொடி கம்பத்தை சேதப்படுத்திய ஊராட்சி செயலாளர் ஹேமந்த் என்கிற சீனிவாசனை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள மஞ்சு, அருண் ஆகியோரை தேடி வருகிறார்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றமாக காணப்பட்டது. போலீசார் அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

Next Story