ஆனைக்கட்டி அருகே பரிதாபம்: காட்டுயானை தாக்கி டிரைவர் பலி
ஆனைக்கட்டி அருகே காட்டுயானை தாக்கி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
துடியலூர்,
கோவையில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆனைக்கட்டி வனப்பகுதி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் வாழ்ந்து வருகின்றன. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையடிவார பகுதியில் உள்ள ஊர்களுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியை சேர்ந்தவர் மனோஜ் என்ற ஞானப்பிரகாசம்(வயது 31). டிராக்டர் டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் அருண்குமார்(32) என்பவருடன் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ஆனைக்கட்டி அருகே போப்னாரி பகுதியில் விவசாய பணிகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு திரும்பினார். மோட்டார் சைக்கிளை அருண்குமார் ஓட்டினார். மூணுகுட்டை கருப்பராயன் கோவில் அருகே புதர்மறைவில் நின்ற காட்டுயானை திடீரென மோட்டார் சைக்கிளை வழிமறித்தது.
இதை சற்றும் எதிர்பாராத அருண்குமார், மோட்டார் சைக் கிளை நிறுத்தாமல் தொடர் ந்து ஓட்டினார். எனினும் பின்னால் அமர்ந்து இருந்த ஞானப்பிரகாசத்தை காட்டுயானை துதிக்கையால் தாக்கியது. இதனால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் மட்டும் கீழே விழுந்தார். பின்னர் அவரை காட்டுயானை தந்தத்தால் குத்தி காலால் மிதித்தது. இதில் உடல் நசுங்கி படுகாயம் அடைந்த ஞானப்பிரகாசம் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து, காட்டுயானையை விரட்டினர். பின்னர் ஞானப்பிரகாசத்தை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதை அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வன அதிகாரி சுரேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் அருண்குமார் நூலிழையில் உயிர் தப்பினார்.
Related Tags :
Next Story