பெருமாள் ஏரியின் கொள்ளளவை அதிகரிக்க ரூ.120 கோடியில் புதிய திட்டம் - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தகவல்
பெருமாள் ஏரியின் கொள்ளளவை அதிகரிக்க ரூ.120 கோடியில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே பெருமாள் ஏரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதகுகளை நேற்று கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அருவாமூக்கு திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதியில் மழைக்காலங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறுகையில், பெருமாள் ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரங்களுள் ஒன்றாகும். இந்த ஏரியின் கொள்ளளவு 574 மி.கன அடியாகும். இந்த ஏரியில் உள்ள 11 வாய்க்கால்களின் மூலம் சுமார் 6503 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
பெருமாள் ஏரியில் இதுவரை தூர்வாரும் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படாததாலும், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திலிருந்து மோட்டார் பம்புகள் மூலம் தொடர்ந்து வெளியேற்றப்படும் கசடுகலந்த நீரால் தொடர்ச்சியாக ஏரி தூர்ந்து போய் வருகிறது. இதனால் ஏரியின் கொள்ளளவு குறைந்து கொண்டே வருவதால், ஒரு முறை சாகுபடிக்கு மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சட்டமன்றத்தில் பெருமாள் ஏரியின் கொள்ளளவை அதிகரிக்கும் பொருட்டு ரூ.120 கோடியில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பெருமாள் ஏரியின் வடிகால், பரவனாறு என்ற பெயரில் 36 கி.மீ. தூரத்தில் கடலூர் பழைய துறைமுகம் அருகே கடலில் கலக்கிறது. வெள்ள காலங்களில் நீர்பரப்பின் புவியியல் மற்றும் இடவியல் காரணமாக இந்த ஆறு வெள்ள நீரை விரைவாக வெளியேற்ற இயலாத நிலை உள்ளது. இதனால் ஆற்றின் இருபுறமும் உள்ள 24 கிராமங்கள் பாதிக்கப்படுகிறது.
எனவே, பரவனாற்றில் ஏற்படும் வெள்ள பெருக்கின்போது 21,200 கனஅடி தண்ணீரை கடலில் கலக்கும் வகையில் புதிய கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
அப்போது சப்-கலெக்டர் (பயிற்சி) ஜெயராஜ பவுலின், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், எஸ்.டி.ஓ பாலமுருகன், உதவி பொறியாளர் அருளரசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story