கரும்பு ஆராய்ச்சி நிலையத்துக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடத்தை அளவீடு செய்யும் பணி - அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


கரும்பு ஆராய்ச்சி நிலையத்துக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடத்தை அளவீடு செய்யும் பணி - அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 Sept 2020 7:30 PM IST (Updated: 25 Sept 2020 7:22 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் கரும்பு ஆராய்ச்சி நிலையத்துக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்,

கடலூர் செம்மண்டலம் வில்வநகர் பகுதியில் கரும்பு ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையத்துக்கு சொந்தமான இடத்தை, அதே பகுதியில் வசிக்கும் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆக்கிரமிப்புகளை தாங்களே முன்வந்து அகற்றிக்கொள்ளும்படி வருவாய்த்துறை சார்பில் 18 குடும்பத்தினருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் அதனை அகற்றவில்லை.

இதற்கிடையே நேற்று காலை வருவாய்த்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு இடத்தை அளவீடு செய்வதற்காக சென்றனர். பின்னர் அவர்கள் கரும்பு ஆராய்ச்சி நிலையம் அருகே உள்ள இடத்தில் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த பொதுமக்கள், கரும்பு ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படுவதற்கு முன்பே சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் இதே இடத்தில் வசித்து வருகிறோம். இந்த இடத்துக்கான பட்டா அனைத்தும் எங்களிடம் உள்ளது, அதனால் அளவீடு செய்யும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அளவீடு செய்யும் பணி தொடங்கி நடைபெற்றது.

Next Story