பெருமாநல்லூர் அருகே, செல்போன் திருடிய 3 பேர் கைது


பெருமாநல்லூர் அருகே, செல்போன் திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 25 Sept 2020 8:30 PM IST (Updated: 25 Sept 2020 8:23 PM IST)
t-max-icont-min-icon

பெருமாநல்லூர் அருகே செல்போன் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெருமாநல்லூர்,

அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 27). சம்பவத்தன்று இவர் அய்யம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர் அவரது செல்போனை பறித்துச்சென்றனர். உடனடியாக பெருமாநல்லூர் போலீசாருக்கு முனீஸ்வரன் தகவல் தெரிவித்தார்.

இந்தநிலையில் கணக்கம்பாளையம் பிரிவு அருகே பெருமாநல்லூர் போலீசார் வாகன சோதனையில் இருந்ததைப் பார்த்த வழிப்பறி திருடர்கள் 3 பேரும் வண்டியை திருப்பிக்கொண்டு வந்து பாரதிநகர் பாலத்துக்கு அடியில் செல்போனை மறைத்துவைத்தனர். பின்னர் செல்போனை விற்பனை செய்ய சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த சவுகத் அலி (35) என்பவருக்கு போன் செய்து அந்த பாலம் அருகே வந்து பெற்றுக்கொள்ளவும் என கூறினார்கள்.

இந்த நிலையில் அவர்களை துரத்தி வந்த போலீசார் செல்போனை கொடுப்பதற்காக நின்று கொண்டிருந்த 3 பேரையும் செல்போன் வாங்க வந்த சவுகத் அலியையும் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் சாமுண்டிபுரம் சங்கம் நகர் சாரதா காம்பவுண்டை சேர்ந்த அஜித்குமார் (22), சாமுண்டிபுரம் நேருஜி நகரைச் சேர்ந்த நரேந்திரன் (21), பெருமாநல்லூர் தட்டாங்குட்டை சிவசக்தி நகரைச் சேர்ந்த ஜீவா (27) என்பதும் தெரியவந்தது. பின்னர் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட செல்போன் திருடர்கள் 3 பேர் மீதும் திருப்பூர் வேலம்பாளையம், திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி மற்றும் செல்போன் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பெருமாநல்லூர் போலீசார் 15 பேர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

Next Story