திருப்பூர் மாவட்டத்தில், கொரோனாவுக்கு மேலும் 9 பேர் பலி - ஒரே நாளில் 188 பேருக்கு தொற்று உறுதி


திருப்பூர் மாவட்டத்தில், கொரோனாவுக்கு மேலும் 9 பேர் பலி - ஒரே நாளில் 188 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 25 Sept 2020 8:32 PM IST (Updated: 25 Sept 2020 8:32 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 பெண்கள் உள்பட 9 பேர் இறந்தனர். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 110-ஆக உயர்ந்துள்ளது.நேற்று ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை உள்பட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட அறிகுறிகளுடன் இருக்கிறவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர அவசர சிகிச்சை தேவைப்படுகிறவர்கள் கோவை அரசு மருத்துவமனை மற்றும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள்.

தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுபோல் பலியாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவர்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் பலியாகி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 5 பெண்கள் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர்.

இதில் உடுமலையை சேர்ந்த 65 வயது பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலன் இன்றி பலியானார்.

இதுபோல் திருப்பூர் மாநகரத்தை சேர்ந்த 67 மற்றும் 70, 63, 70 வயது பெண்கள் 4 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர்களும் பலியாகினர். இதுபோல் திருப்பூரை சேர்ந்த 60 வயது, 86 வயது, 78, 50 வயது ஆகிய ஆண்கள் 4 பேரும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று அவர்களும் பலியாகினர். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 110-ஆக உயர்ந்துள்ளது. இதில் 23 பேர் பெண்கள் மற்றும் 87 பேர் ஆண்கள் ஆவார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள், தொழில்துறையினர் என பலரும் அச்சமடைந்து வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக திருப்பூரில் கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு 300-ஐ நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நேற்று மட்டும் திருப்பூரில் 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்கள் அனைவருக்கும் தற்போது மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. சிலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்து கொண்டிருக்கிறார்கள்.

தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 24 ஆக உயர்ந்துள்ளது. 7 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு நெருங்கியுள்ளதால், பலரும் அச்சத்தில் இருந்து வருகிறார்கள். அரசு அதிகாரிகள் முதல் சாதாரண தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரிடமும் கொரோனா பரவி வருகிறது. பொது போக்குவரத்து தளர்வு ஏற்படுத்தப்பட்டத்தில் இருந்து பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே திருப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று 107 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 87 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துகொண்டிருக்கிறது. இது தவிர கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 61 பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரியும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதுதவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 25 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்கள் அனைவரையும் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story