பல்லடம் அருகே வேன் மீது லாரி மோதல்; அண்ணன்-தங்கை பலி
பல்லடம் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் அண்ணன்-தங்கை இருவரும் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பல்லடம்,
திருப்பூர் கொங்கணகிரியைச் சேர்ந்தவர் தேவஅன்பு மகன் ரன்னர் (வயது 42). திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவரது தங்கை தாமரைச்செல்வி (33). இவர் கோவையில் கணவர் ஜெயராஜூடன் (34) வசித்து வந்தார். இந்த நிலையில் ரன்னர் சம்பவத்தன்று தங்கையை பார்க்க கோவைக்கு சென்றார்.
பின்னர் தங்கை மற்றும் அவரது கணவர் ஜெயராஜை அழைத்துக்கொண்டு ஒரு வேனில் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். வேனை ரன்னர் ஓட்டி வந்தார். அவர்கள் வேன் கோவை - திருச்சி நெடுஞ்சாலையில், பல்லடத்தை அடுத்த காளிவேலம்பட்டி பிரிவு என்ற இடம் அருகே நேற்று மாலை 6 மணி அளவில் வந்துகொண்டிருந்தது. அப்போது எதிரே பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி ஒரு லாரி வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக வேன் மீது லாரி பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் வேன் அப்பளம்போல் நொறுங்கியது, இதில் வேனில் இருந்த ரன்னர், தாமரைச்செல்வி, ஜெயராஜ் மூவரும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அண்ணன்-தங்கையான ரன்னர் மற்றும் தாமரைச்செல்வி ஆகியோர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பலத்த காயமடைந்த ஜெயராஜூக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். வேன் மீது லாரி மோதிய விபத்தில் அண்ணன்-தங்கை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story