வேளாண் சட்ட திருத்தத்தை எதிர்த்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் 16 இடங்களில் ஆர்ப்பாட்டம் - 28-ந்தேதி நடக்கிறது


வேளாண் சட்ட திருத்தத்தை எதிர்த்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் 16 இடங்களில் ஆர்ப்பாட்டம் - 28-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 25 Sept 2020 9:45 PM IST (Updated: 25 Sept 2020 9:40 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்தத்தை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 28-ந்தேதி 16 இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்வது என சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

விருதுநகர், 

மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்தத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சி சார்பில் வருகிற 28-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவது தொடர்பாக தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் விருதுநகரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தளவாய்பாண்டியன், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அர்ஜூணன், மாநிலக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் இப்ராகிம்ஷா, மனிதநேய மக்கள் கட்சி அஜ்மீர் கான், திராவிடர் கழகம் சண்முகசுந்தரம், ஆதிதமிழர் பேரவை சார்பில் ஈஸ்வரன், வசந்தன், இந்திய ஜனநாயக கட்சி பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வருகிற 28-ந்தேதி விருதுநகர், அருப்புக்கோட்டை நகர், திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி, சிவகாசிநகர், சிவகாசியூனியன், திருத்தங்கல், சாத்தூர், வெம்பக்கோட்டை யூனியனில் 2 இடங்கள், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், ராஜபாளையம் நகர், சேத்தூர், சத்திரப்பட்டி ஆகிய 16 இடங்களில் வேளாண் சட்ட திருத்தத்தை எதிர்த்து வருகிற 28-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

16 இடங்களிலும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள், விவசாயிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்தார்.

Next Story