யாத்திரை பணியாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பு - கோவிலில் பக்தர்கள் நீராட அனுமதிக்க வேண்டுகோள்
ராமேசுவரத்தில் யாத்திரை பணியாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதால் கோவிலில் பக்தர்களை நீராட அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
ராமேசுவரம்,
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் 5 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தாலும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிலில் 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட தொடர்ந்து தடையானது அமலில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராட விதிக்கப்பட்ட தடை 6 மாதத்தை கடந்துள்ளது. இதனால் கோவிலில் உள்ள தீர்த்தக்கிணறுகளை நம்பி வாழும் தீர்த்தம் இறைத்து ஊற்றும் சுமார் 400-க்கும் அதிகமான யாத்திரை பணியாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
இதையடுத்து கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளை திறந்து பக்தர்கள் வழக்கம்போல் நீராடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோவிலுக்குள் எளிதாக சென்று வர வசதியாக கோவிலின் மேற்கு, தெற்கு, வடக்கு வாசல் உள்ளிட்ட கதவுகளை வழக்கம் போல் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இணைந்து கோவில் இணை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளனர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை (சனிக்கிழமை) மேலவாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story