வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் - பெண்கள் உள்பட 188 பேர் கைது


வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் - பெண்கள் உள்பட 188 பேர் கைது
x
தினத்தந்தி 26 Sept 2020 4:00 AM IST (Updated: 25 Sept 2020 11:31 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் உள்பட 188 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளை பொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம், விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் ஒப்பந்தம் பாதுகாப்பு சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும். இதை ஆதரிக்கும் தமிழக அரசை கண்டித்தும் நேற்று கோவில்பட்டியில் அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

பயணியர் விடுதி முன்பு நடந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜி.ராமசுப்பு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் எஸ்.சங்கிலிபாண்டி, ஒன்றிய தலைவர் சங்கர், ரெங்கசாமி, தாலுகா செயலாளர் ஏ.லெனின், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.மகாலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை தலைவர் தமிழரசன், சி.ஐ.டி.யு.சி. கிருஷ்ணவேணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பெண்கள் உள்பட 60 பேரை கைது செய்தனர்.

இதேபோல் கயத்தாறு-மதுரை மெயின் ரோட்டில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் மணி என்ற சுப்பையா தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கயத்தாறு ஒன்றிய விவசாய சங்க செயலாளர் சீனிப்பாண்டியன், சி.பி.எம். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.முருகன், இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட தலைவர் எம்.முருகன், சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் சாலமோன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் தவமணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் அக்கம்மாள், ஜெயகுமார், ராசையா உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட 44 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் நடராஜன் தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா தலைவர் ரவீந்திரன், தாலுகா செயலாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் மகேஷ், சி.ஐ.டி.யு. ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் செல்வகுமார், ஏ.ஐ.டி.யூ.சி. தாலுகா செயலாளர் குருநாதன், ஏ.ஐ.டி.யூ.சி. கட்டுமான மாவட்ட செயலாளர் சேது உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 56 பேரை எட்டயபுரம் போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலகம் அருகே நடந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் நம்பிராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய தலைவர் பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 28 பேரை ஸ்ரீவைகுண்டம் போலீசார் கைது செய்தனர்.

Next Story