வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு கம்யூனிஸ்டு கட்சியினர் - விவசாய சங்கத்தினர் சாலை மறியல்; 467 பேர் கைது


வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு கம்யூனிஸ்டு கட்சியினர் - விவசாய சங்கத்தினர் சாலை மறியல்; 467 பேர் கைது
x
தினத்தந்தி 26 Sept 2020 3:45 AM IST (Updated: 26 Sept 2020 12:51 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்காசி மாவட்டத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட 467 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி,

வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும், தென்காசி பழைய பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விவசாய சங்கங்கள் சார்பில் நேற்று சாலைமறியல் போராட்டம் நடந்தது.

விவசாய சங்க தலைவர் கணபதி, மாதர் சங்க தலைவி கற்பகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 91 பேரை தென்காசி போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

சங்கரன்கோவில் பஸ் நிலையம் முன்பு நடந்த சாலைமறியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் அசோக்ராஜ், மாவட்ட விவசாய தொழிற் சங்க செயலர் முத்துப்பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 88 பேரை சங்கரன்கோவில் டவுன் போலீசார் கைது செய்தனர்.

திருவேங்கடம் காந்தி மண்டபம் முன்பு நடந்த சாலைமறியல் போராட்டத்தில் விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆழ்வார்குறிச்சியில் நடந்த சாலைமறியல் போராட்டத்தில் விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் வேலாயுதம், ஒன்றிய செயலாளர் முத்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 39 பேரை ஆழ்வார்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த சாலைமறியல் போராட்டத்தில் விவசாய சங்க செயலாளர்கள் பரமசிவன், சுந்தர், மாநிலக்குழு உறுப்பினர் வேலுமயில் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 49 பேரை செங்கோட்டை போலீசார் கைது செய்தனர்.

இதேபோன்று தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், சிவகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சாலைமறியல் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற 467 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story