நெல்லை மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் சாலைமறியல்; 213 பேர் கைது - வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தல்


நெல்லை மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் சாலைமறியல்; 213 பேர் கைது - வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 Sep 2020 10:45 PM GMT (Updated: 25 Sep 2020 7:29 PM GMT)

வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, நெல்லை மாவட்டத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் 213 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்தம் விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும் கடுமையாக பாதிக்கும் என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வேளாண் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும், நெல்லையில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நேற்று சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் தர்மன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராஜகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்பட 122 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.

பாளையங்கோட்டை ஆரோக்கியநாதபுரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் தனபால் அன்பு தலைமையில், புதிய வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று அம்பை கல்யாணி திரையரங்கம் எதிரில் நடந்த சாலைமறியல் போராட்டத்தில் விவசாய சங்க தலைவர்கள் பரத்வாஜ், கணபதி, இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், நகர செயலாளர் வடிவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், நகர செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 22 பேரை அம்பை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

வள்ளியூர் பஸ் நிலையம் முன்பு நடந்த சாலைமறியல் போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெரும்படையார், இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் சேதுராமலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் கல்யாணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 33 பேரை வள்ளியூர் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

களக்காட்டில் நடந்த சாலைமறியல் போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கிருஷ்ணன், ஒன்றிய பொறுப்பாளர் முருகன், நகர செயலாளர் முத்துவேல், இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் பாலன், விவசாயிகள் சங்க தலைவர் சந்திரன், தாலுகா செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 36 பேரை களக்காடு போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த சாலைமறியல் போராட்டத்தில் பங்கேற்ற 213 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story