புதுச்சேரியில் மீட்கப்பட்ட 74 சிலைகள் கோர்ட்டில் ஒப்படைப்பு


புதுச்சேரியில் மீட்கப்பட்ட 74 சிலைகள் கோர்ட்டில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 26 Sept 2020 5:03 AM IST (Updated: 26 Sept 2020 5:03 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் மீட்கப்பட்ட பழமைவாய்ந்த 74 சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி,

தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த கோவில்களில் இருந்து திருடி கொண்டு வந்து விற்கப்பட்ட ஏராளமான உலோகம் மற்றும் கற்சிலைகள் புதுச்சேரி ரோமன் ரோலண்டு தெருவை சேர்ந்த ஜீன்பால் ராஜரத்தினம் என்பவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஜீன்பால் ராஜரத்தினம் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்று சோதனை செய்தனர். சோதனையில் 60 உலோக சிலைகள் மற்றும் 14 கற்சிலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அந்த சிலைகளை மீட்டனர்.

மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தையும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் நேற்று காலை ஒப்படைத்தனர்.

இதையடுத்து சிலைகளின் உயரம், எடை ஆகியவற்றை நீதிபதி விஜயகுமார் முன்னிலையில் ஊழியர்கள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து 60 உலோக சிலைகளை கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கவும், 14 கற்சிலைகளை கோர்ட்டில் பாதுகாப்பாக வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியில் கைப்பற்றப்பட்ட அனைத்து சிலைகளும் கோவில்களில் இருக்கக்கூடிய உற்சவர் சிலைகள். கோவில்களில் வைத்து வழிபாடு செய்யப்படக்கூடிய சிலைகள். இந்த சிலைகளை வீடுகளில் தனி நபர்கள் வைத்திருக்கக்கூடிய வாய்ப்பு இல்லை. எனவே இந்த சிலைகள் கண்டிப்பாக தமிழகத்தில் உள்ள பழமைவாய்ந்த பல்வேறு கோவில்களில் இருந்து திருடப்பட்டிருக்கும் என்ற அடிப்படையில் அவற்றை மீட்டு கும்பகோணம் கோர்ட்டில் முறைப்படி ஒப்படைத்துள்ளோம்.

இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களின் பழமை வாய்ந்த சிலைகள் தொடர்பான புகைப்படங்கள் நிறைய பேரிடம் உள்ளன. இந்த புகைப்படங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த சிலைகள் எந்தெந்த கோவில்களில் இருந்து திருடப்பட்டவை என்பது தெரிய வரும். தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தி பின்னர் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதையடுத்து அந்தந்த கோவில்களில் சிலைகளை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story