மாவட்ட செய்திகள்

வேளாண் சட்ட மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் சட்ட நகல் எரிப்பு-சாலைமறியல் - 175 பேர் கைது + "||" + Urging the withdrawal of agricultural bills Farmers Association Legal Copy Burning- Roadblock

வேளாண் சட்ட மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் சட்ட நகல் எரிப்பு-சாலைமறியல் - 175 பேர் கைது

வேளாண் சட்ட மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் சட்ட நகல் எரிப்பு-சாலைமறியல் - 175 பேர் கைது
வேளாண் சட்ட மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் விவசாயிகள் வேளாண் சட்ட நகல்களை எரித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 175 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்,

நாகை அருகே சிக்கலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாநில செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சரபோஜி, ஒன்றிய செயலாளர் பகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அத்தியாவசிய திருத்த சட்டம், வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு மற்றும் உறுதி செய்து கொடுத்தல் சட்டம், விவசாயிகளுக்கான விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு சட்டம் ஆகிய வேளாண் சட்ட மசோதாக்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். விவசாயிகளுக்கு எதிராக புதுப்புது சட்டங்களை கொண்டு வரக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். அப்போது வேளாண் சட்ட நகல்களை தீயிட்டு எரித்தனர். இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் 25 பேரை கைது செய்தனர்.

இதேபோல் கீழையூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மேலப்பிடாகை கடைத்தெருவில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய தலைவர் பால்சாமி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். இதில் ஒன்றிய செயலாளர் முருகையன், விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சித்தார்த்தன் மற்றும் இந்திய ஜனாநாயக மாதர் சங்க மாவட்டசெயலாளர் லதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். மேலப்பிடாகையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கீழையூர் போலீசார் கைது செய்தனர்.

கீழையூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த விவசாய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் கீழையூரில் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய தலைவர் செல்லையன் தலைமை தாங்கினார். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சீனிவாசன், விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் ராமலிங்கம், விவசாய சங்க ஒன்றிய குழு உறுப்பினர் தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் சம்பந்தம், ஒன்றிய செயலாளர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

வாய்மேட்டை அடுத்த மருதூர் கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் நாராயணன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வீரப்பன், விவசாயிகள் சங்க ஒன்றிய நிர்வாகி செங்குட்டுவன், ஒளி சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தலைஞாயிறு ஒன்றியம் அருந்தவம்புலம் கடைத்தெருவில் நடந்த சாலைமறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். தாணிக்கோட்டகம் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதில் விவசாய சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அகில இந்திய விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் கீழ்வேளூரில் நடைபெற்றது. போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும், மார்க்சிஸ்ட் மாநில குழு உறுப்பினருமான மாரிமுத்து தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் அபூபக்கர், கிருஷ்ணமூர்த்தி. முத்தையன், மீரா, மகாலிங்கம், பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்கத்தினர்கள் கலந்து கொண்டனர். சாலை மறியல் போராட்டத்தினால் நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருமருகல் அருகே அண்ணாமண்டபம் மெயின்ரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் நடத்தினர். போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பொன்மணி தலைமை தாங்கினார். விவசாய சங்க ஒன்றிய தலைவர் ஸ்டாலின் பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயபால், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமருகல் பஸ் நிலையம் எதிரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் மாசிலாமணி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாபுஜி, ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் நாகை மாவட்டத்தில் 16 இடங்களில் நடந்த சாலைமறியல் மற்றும் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 175 பேரை போலீசார் கைது செய்தனர்.