வேளாண் சட்ட மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 560 பேர் கைது


வேளாண் சட்ட மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 560 பேர் கைது
x
தினத்தந்தி 26 Sept 2020 4:00 AM IST (Updated: 26 Sept 2020 6:29 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்ட மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் சட்ட நகலை எரித்து சாலை மறியலில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 560 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளை பாதிக்கும் வகையிலும் வேளாண் தொழிலை அப்புறப்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களை ஆதரிக்கும் வகையில் உள்ளதாக கூறி வேளாண்மை சார்ந்த 3 சட்ட மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு் கட்சி மற்றும் மார்்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்ந்த விவசாய சங்கத்தினர் வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சாலைமறியல் மற்றும் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சார்ந்த விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார்.

இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள் (மா.கம்யூனிஸ்டு), தேசபந்து (தி.மு.க.), மோகன் (திராவிட கழகம்), பூபாலன்(விடுதலை சிறுத்தைகள் கட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து கட்சி நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சாலை மறியல் போராட்டத்தின் போது சட்ட நகலை எரித்து எதிர்ப்பை தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் வலங்கைமான் கடைத்தெருவில் விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், சி.பி.எம். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் தலைமையில் சி.பி.ஐ. விவசாய சங்க ஒன்றிய தலைவர் சண்முகம், சி.பி.எம். ஒன்றிய தலைவர் சின்னராசு ஆகியோர் முன்னிலையில், விவசாயிகள் மத்திய அரசு தாக்கல் செய்த புதிய வேளாண் சட்ட நகலை எரித்தனர். தொடர்ந்து கும்பகோணம் மன்னார்குடி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வலங்கைமான் போலீசார் நகல் எரிப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனர்.

திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் சட்ட நகல் எரிப்பு மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் உலகநாதன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு துணை தலைவர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் ஜோசப், ஒன்றிய செயலாளர் ஜெயபால், நகர செயலாளர் சுந்தர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விவசாய சங்க நிர்வாகிகள் மாநில தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு ஜோதிபாசு, நகர செயலாளர் ரகுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேகோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டூர் பஸ் நிலையம் முன்பு சட்ட நகல் எரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பரந்தாமன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி விவசாய சங்க ஒன்றிய நிர்வாகிகள் அறிவுடை நம்பி, சவுந்தரராஜன், முருகேசன், ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விவசாய சங்க ஒன்றிய நிர்வாகிகள் கோவிந்தராசு, அறிவின்செல்வன், ரகுபதி, ஒன்றியக்குழு உறுப்பினர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குடவாசல் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் நடந்தது. போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் லட்சுமி, ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கெரக்கொரியா, இன்பநாதன், கிறிஸ்துவநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

நீடாமங்கலத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவினர் சட்ட நகலை எரித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட துணைச்செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், விவசாய சங்க ஒன்றிய தலைவர் பூசாந்திரம், மார்க்சிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் கைலாசம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மாதர்சங்க மாவட்ட தலைவர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கொரடாச்சேரியில் விவசாய சங்கத்தினர் சாலைமறியல் மற்றும் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்தினர். கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகில் நடைபெற்ற போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் கேசவராஜ் தலைமை தாங்கினார். போராட்டத்தில் திராவிடர் கழக விவசாய அணி செயலாளர் ராயபுரம் கோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயபால், திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் தங்க கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். அப்போது சாலை மறியல் மற்றும் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் கூட்டு இயக்கம் சார்பில் வேளாண் சட்ட நகலை எரித்து சாலைமறியல் நடைபெற்றது. இதற்கு இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் மார்க்ஸ் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணைச்செயலாளர் சந்திரசேகர ஆசாத், மாவட்ட குழு உறுப்பினர் தமிழ்மணி உள்பட விவசாயிகள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை முத்துப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் திருவாரூர் மாவட்டம் முழுவதும் சட்ட நகல் எரிப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 560 பேரை போலீசார் கைது செய்து விடுவித்தனர்.

Next Story