பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்த படகு திடீரென பழுதாகி நின்றதால் பரபரப்பு


பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்த படகு திடீரென பழுதாகி நின்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Sept 2020 3:30 AM IST (Updated: 26 Sept 2020 7:15 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் கடலில் தூக்குப்பாலத்தை கடந்த மீன்பிடி படகு திடீரென பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக வடக்கு மற்றும் தென் கடல் பகுதியில் ஏராளமான மீன்பிடி படகுகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காத்திருந்தன.

இந்த நிலையில் பாம்பன் தூக்குப்பாலம் நேற்று பகல் 12 மணி அளவில் ரெயில்வே பணியாளர்களால் திறக்கப்பட்டது. தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து கடலூர் துறைமுகம் செல்வதற்காக 35 மீட்டர் நீளமும் சுமார் 330 டன் எடையும் கொண்ட இரண்டு பாய்மரப்படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக தூக்குப்பாலத்தை மெதுவாக கடந்து சென்றன.

அப்போது வடக்கு பகுதியில் இருந்து தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்வதற்காக 10-க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் மற்றும் தெற்கு பகுதியில் இருந்து வடக்கு கடலான பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்வதற்காக 30-க்கும் மேற்பட்ட படகுகளும் தூக்குப்பாலத்தை கடந்து சென்றன.

இந்தநிலையில் தூக்குப்பாலத்தை கடப்பதற்காக வந்த மண்டபத்தைச் சேர்ந்த ஒரு மீன்பிடி விசைப்படகு தூக்குப்பாலம் அருகே வந்தபோது திடீரென என்ஜின் பழுதாகி நின்றது. அந்த படகு தூக்குப்பாலத்தில் மோதாமல் இருக்க படகில் இருந்த மீனவர்கள் சாமர்த்தியமாக பாலத்தின் அருகே உள்ள கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தினர். தொடர்ந்து அந்த வழியாக வந்த மற்றொரு மீன்பிடி படகு உதவியுடன் பழுதாகி நின்ற விசைப்படகு கயிறு கட்டி இழுத்து ஆழ்கடல் பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டது.

Next Story