கரூரில் பழக்கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு - 3 பேர் மீது வழக்குப்பதிவு
கரூரில், பழக்கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர்,
கரூர் அருகே உள்ள ஆத்தூர் செல்லரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவசாமி (வயது 37). இவர் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் பழ குடோன் வைத்து தொழில் செய்து வருகிறார். அதே தெருவை சேர்ந்த கிச்சான்(28) என்பவர், சிவசாமியிடம் பழம் வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். அந்தவகையில் இருவருக்கும் கொடுக்கல்-வாங்கலில் பிரச்சினை ஏற்பட்டது.
இதுதொடர்பாக கடந்த மாதம் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் சிவசாமியை, கிச்சான் தகாத வார்த்தையால் திட்டி தாக்கி உள்ளார். இதை தடுக்க சென்ற பக்கத்து கடையில் வேலை செய்யும் நவாப்ஜான் என்பவரையும் தாக்கி உள்ளார். இதுகுறித்து கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சிவசாமி கொடுத்த புகாரின்பேரில், கிச்சான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சிவசாமி பழக்கடையை மூடி விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். ஆத்தூர் பெரியமாரியம்மன் கோவில் அருகே சென்றபோது கிச்சான் மற்றும் அவருடைய நண்பர்கள் 2 பேர் சேர்ந்து சிவசாமியை வழிமறித்து வழக்கை வாபஸ் வாங்க சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அதற்கு அவர் மறுக்கவே, சிவசாமியை அரிவாளால் வெட்டியும், கட்டையால் தாக்கி விட்டும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த சிவசாமி கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், கிச்சான் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றார்.
Related Tags :
Next Story