கிசான் திட்டத்தில், முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெறும் பணி தீவிரம் - கலெக்டர் கிரண்குராலா ஆய்வு


கிசான் திட்டத்தில், முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெறும் பணி தீவிரம் - கலெக்டர் கிரண்குராலா ஆய்வு
x
தினத்தந்தி 26 Sep 2020 4:45 AM GMT (Updated: 26 Sep 2020 4:43 AM GMT)

கிசான் திட்டத்தில் முறைகேடாக சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெறும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியை கலெக்டர் கிரண்குராலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி உதவி திட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்கள் 2 லட்சத்து 37 ஆயிரத்து 57 பேர் சேர்ந்து வங்கி மூலம் பணம் பெற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக வேளாண் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே விவசாயிகள் திட்டத்தில் முறைகேடாக சேர்ந்து பணம் பெற்றவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெறும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதில் 76 ஆயிரம் பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதோடு, அவர்களின் வங்கி கணக்கில் இருந்து மொத்தம் ரூ.25 கோடி திரும்ப பெறப்பட்டது.

மீதமுள்ளவர்களின் வங்கி கணக்கில் பணம் இல்லாததால், அவர்களின் வீடுகளுக்கே சென்று பணத்தை திரும்ப பெறும் பணியில் வேளாண்மை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் இருந்து விவசாயிகள் திட்டத்தில் முறைகேடாக சேர்ந்து பணம் பெற்ற விவசாயிகள் அல்லாதவர்களின் ஒவ்வொரு வீடாக சென்று பணம் வசூல் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த பணியை மாவட்ட கலெக்டர் கிரண்குராலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வேலாயுதம், வேளாண்மை உதவி இயக்குனர் தேவி, வேளாண்மை உதவி அலுவலர் புஷ்பராணி உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story