பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்தது: கொரோனாவுக்கு மூதாட்டி பலி - கர்ப்பிணிகள் உள்பட 235 பேருக்கு தொற்று உறுதி
கொரோனாவுக்கு சிதம்பரம் மூதாட்டி பலியானார். கர்ப்பிணிகள் உள்பட 235 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்தது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 18 ஆயிரத்து 979 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புதிதாக 235 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் நாகையில் இருந்து மங்களூர் வந்த 2 பேர், கடலூர், கம்மாபுரம், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி என்.எல்.சி.யை சேர்ந்த 5 கர்ப்பிணிகள், நோய் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 87 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 141 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 214 ஆக உயர்ந்தது. நேற்று 424 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இது வரை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 377 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். நேற்று முன்தினம் வரை 206 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று மூதாட்டி ஒருவர் பலியானார். இதன் விவரம் வருமாறு:-
சிதம்பரத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி சளி, காய்ச்சல் போன்ற நோய் தொற்று அறிகுறிகளுடன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய் தொற்று உறுதியானது. இருப்பினும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கொரோனா பாதித்த 1501 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 129 பேர் வெளி மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,303 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
Related Tags :
Next Story