போலி ஜி.எஸ்.டி. பதிவு மூலம் ரூ.21 லட்சத்துக்கு நூல் வாங்கி மில் அதிபரிடம் மோசடி - வாலிபர் கைது


போலி ஜி.எஸ்.டி. பதிவு மூலம் ரூ.21 லட்சத்துக்கு நூல் வாங்கி மில் அதிபரிடம் மோசடி - வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Sept 2020 10:45 AM IST (Updated: 26 Sept 2020 10:41 AM IST)
t-max-icont-min-icon

போலி ஜி.எஸ்.டி. பதிவு மூலம் ரூ.21 லட்சத்துக்கு மில் அதிபரிடம் நூல் வாங்கி மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோவை,

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் சவுந்தர்ராஜன்(வயது 54) என்பவர் நூற்பாலை நடத்தி வருகிறார். இவரிடம், திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டியன்(32) என்பவர் திருப்பூரில் நூற்பாலை நடத்தி வருவதாகவும், ஆடை தயாரிக்க நூல் தேவைப்படுவதாகவும் கூறினார். இதற்கான ஜி.எஸ்.டி. நம்பரையும் அனுப்பி வைத்தார்.

திருப்பூரில் உண்மையிலேயே மில் இருப்பதாக கருதி ரூ.21 லட்சத்துக்கு 3 லாரிகளில் நூல்களை சவுந்தர்ராஜன் அனுப்பினார். இந்த நூல்களுக்கு பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்புவதாக கூறிய சுந்தரபாண்டியன் ஆன்லைனில் பண பரிமாற்றம் செய்து இருப்பதாக வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பினார். இதனை நம்ப வேண்டும் என்பதற்காக போலி காசோலையை படம் எடுத்து, பணம் அனுப்பியதற்கான ஆதாரம் என்றும் வாட்ஸ்-அப்பில் அனுப்பினார். ஆனால் தனது வங்கி கணக்கில் பணம் வராததால், அதுகுறித்து சவுந்தர்ராஜன் கேட்டபோது, சுந்தரபாண்டியன் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் மோசடி செய்யப்பட்டு இருப்பதை உணர்ந்த சவுந்தர்ராஜன், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் யமுனாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் லெனின் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது குற்றம் சாட்டப்பட்ட சுந்தரபாண்டியனுக்கு திருப்பூரில் மில் இல்லை என்பதும், போலி ஜி.எஸ்.டி. பதிவு மூலம் நூல் வாங்கி வேறு நபருக்கு விற்று மோசடி செய்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சுந்தரபாண்டியன் மீது மோசடி சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்தனர். மில் இல்லாமலே ஜி.எஸ்.டி நம்பர் பெற அவருக்கு, திருப்பூரை சேர்ந்த ஒருவர் உடந்தையாக செயல்பட்டு உள்ளார். அந்த ஆசாமி குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான சுந்தரபாண்டியன் கர்நாடகா, மராட்டியம் ஆகிய மாநிலங்களிலும் இதுபோன்று நூல் வாங்கி ரூ.2 கோடிக்கும் மேல் மோசடி செய்து இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். கைதான சுந்தரபாண்டியனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

Next Story