திண்டுக்கல்லில் வேளாண் மசோதா நகலை எரித்து விவசாய சங்கத்தினர் போராட்டம் - மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 748 பேர் கைது


திண்டுக்கல்லில் வேளாண் மசோதா நகலை எரித்து விவசாய சங்கத்தினர் போராட்டம் - மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 748 பேர் கைது
x
தினத்தந்தி 26 Sept 2020 11:45 AM IST (Updated: 26 Sept 2020 11:34 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், வேளாண் மசோதா நகலை எரித்து விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுதொடர்பாக மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 748 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்,

நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாய சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு கூட்டமைப்பின் தலைவர் லட்சுமணபெருமாள் தலைமை தாங்கினார். துணை தலைவர் ரசூல் மொகைதீன் முன்னிலையில் விவசாய சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் வேளாண் மசோதா நகலை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த வடக்கு போலீசார் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 34 பேரை கைது செய்தனர். இதேபோல் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில செயலாளர் பசும்பொன்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், வேளாண் மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் சந்தானம், மாநகர செயலாளர் கார்த்தி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராணி, மாநிலக்குழு உறுப்பினர் வனஜா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் விஷ்ணுவர்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 31 பேரை வடக்கு போலீசார் கைது செய்தனர்.

பழனி பஸ் நிலைய ரவுண்டானா முன்பு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அருள்செல்வன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணன், துணை தலைவர் மணிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின் போது வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் பழனி டவுன் போலீசார் கைது செய்தனர். மேலும் ஆயக்குடி, அய்யலூர் உள்பட மாவட்ட முழுவதும் 13 இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 748 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story