மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் - வேளாண்மை அதிகாரி தகவல்
மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ரமணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 1,926 எக்டர் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இறவை மற்றும் மானாவரி பயிராக சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளப் பயிரானது குறைந்த நாளில் அதிக லாபம் தரும் என்பதால், விவசாயிகள் இப்பயிரை விரும்பி சாகுபடி செய்து வருகின்றனர். நடப்பு காரீப் பருவத்தில் இதுவரை 385 எக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பயிர் நிலை விதைப்பு முதல் 15-45 நாட்கள் பயிராக உள்ளது. மேலும் அக்டோபர் மாதம் இன்னும் அதிக அளவு பரப்பில் மக்காச்சோளப்பயிர் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்காச்சோளப்பயிரினை அமெரிக்கன் படைப்புழு முதன் முதலாக கடந்த 2018-ம் ஆண்டு தாக்கி மக்காச்சோளப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. அமெரிக்கன் படைப்புழுவினை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.
கடந்த 2019-ம் ஆண்டில் கோடை உழவு, வேப்பம் புண்ணாக்கு இடுதல், விதை நேர்த்தி, வரப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி, இனக்கவர்ச்சி பொறிகள் போன்ற பல்வேறு ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறைகள் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவசாயிகள் கடைபிடித்திட வேளாண்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக படைப்புழுவின் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டு 6 மெட்ரிக் டன் வரை மகசூல் கிடைத்தது. கடந்த ஆண்டைப்போலவே விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கையாண்டு படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்திட வேளாண்துறை திருவண்ணாமலை மாவட்டத்தில் பூச்சி மருந்து விற்பனையாளர்களுக்கு பயிற்சி, விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
ரூ.10 லட்சம் ஒதுக்கீடு
விவசாயிகளுக்கு தேவையான பவேரியா மற்றும் மெட்டாரைசியம் போன்ற உயிரி பூச்சிக்கொல்லிகள் திருவண்ணாமலை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் படைப்புழு மேலாண்மைக்காக நடப்பு நிதி ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன்படி மக்காச்சோள சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் எக்டருக்கு ரூ.2 ஆயிரம் வீதம், பவேரியா பேசியானா கொண்டு விதைநேர்த்தி செய்தல், நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்திட வரப்புப்பயிராக தட்டைப்பயறு, சூரியகாந்தி, எள், சோளம் மற்றும் சாமந்தி பயிர்களை பயிரிடவும், உளுந்து, பாசிப்பயறு, ஊடு பயிராகவும் பயிரிடவும், படைப்புழு தாக்குதல் ஏற்பட்டால் இளம்பருவத்தில் (15 முதல் 20 நாட்களில்) வேம்பு சார்ந்த பூச்சிகொல்லிகளை தெளித்திடவும், 45 முதல் 50 நாட்களில் பரிந்துரைக்கப்பட்ட ரசாயன பூச்சிகொல்லி மருந்துகளை தெளித்து படைப்புழுக்களை கட்டுப்படுத்த வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
கனிணி சிட்டா, மக்காச்சோள பயிர் சாகுபடி செய்தமைக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரின் பரிந்துரையுடன், படைப்புழு மேலாண்மைக்காக வாங்கிய பயிர் பாதுகாப்பு மருந்து பட்டியல்கள், பயிர் பாதுகாப்பு செய்தமைக்கான புகைப்படங்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய தொகையாக எக்டருக்கு ரூ.2 ஆயிரம் பின்னேற்பு மானியமாக அவர்களது வங்கிக் கணக்கில் வழங்கப்படும். இந்த மானியத்தொகை ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 எக்டர் மக்காச்சோள சாகுபடிக்கு வழங்கப்படும். எனவே மேற்கண்ட பயிர்பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றி நடப்பாண்டிலும் படைப்புழு தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்தி, நல்ல விளைச்சல் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story