மாவட்ட செய்திகள்

நெல்லை அருகே பழிக்குப்பழியாக பயங்கரம்: வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை அரிவாளால் சரமாரியாக வெட்டிய 12 பேர் கும்பலுக்கு வலைவீச்சு + "||" + Near Nellai Throw the bomb Massacre of 2 women Cut by a barrage of scythes Gang of 12 people

நெல்லை அருகே பழிக்குப்பழியாக பயங்கரம்: வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை அரிவாளால் சரமாரியாக வெட்டிய 12 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

நெல்லை அருகே பழிக்குப்பழியாக பயங்கரம்: வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை அரிவாளால் சரமாரியாக வெட்டிய 12 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
நெல்லை அருகே பழிக்குப்பழியாக 2 பெண்கள் மீது வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் 12 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது. தலைமறைவான கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாங்குநேரி,

நெல்லை அருகே நாங்குநேரியை அடுத்த மறுகால்குறிச்சியைச் சேர்ந்தவர் அருணாசலம். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சண்முகத்தாய் (வயது 45). அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவர் நாங்குநேரி பஸ் நிலையத்தில் பழக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி (40). இவரும், சண்முகத்தாயும் உறவினர்கள் ஆவர். இவர்கள் 2 பேரும் அங்கன்வாடி பணியாளர்களாக வேலை செய்து வந்தனர்.


இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் அருணாசலம் வீட்டுக்கு 6 மோட்டார் சைக்கிள்களில் 12 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தது. முககவசம் அணிந்து வந்த அவர்கள் திடீரென்று நாட்டு வெடிகுண்டு, பெட்ரோல் குண்டு ஆகியவற்றை எடுத்து அருணாசலம் வீட்டின் மீது அடுத்தடுத்து வீசினர். அவைகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

இதனால் வீட்டின் முன்பக்க கதவு தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் உள்ள அலமாரியிலும் தீப்பிடித்தது. பின்னர் அந்த நபர்கள் அருணாசலம் வீட்டுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர்.

அப்போது வீட்டில் இருந்த அருணாசலம், அவருடைய மனைவி சண்முகத்தாய் ஆகிய 2 பேரும் அதிர்ச்சி அடைந்து அலறியடித்தவாறு, வீட்டின் பின்பக்க வாசல் வழியாக வெளியே தப்பி ஓடினர். ஆனாலும் அவர்களை அந்த கும்பல் விரட்டிச் சென்றது. மேலும் அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளையும் வீசியது.

இதில் சண்முகத்தாயின் முதுகில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதனால் அவர் அலறி துடித்தவாறு நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்னர் சண்முகத்தாயை அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆனாலும் ஆத்திரம் தீராத அந்த கும்பல், சண்முகத்தாயின் தலையை துண்டித்து எடுத்து சென்றது. பின்னர் ஊருக்கு மேல்புறம் உள்ள மெயின் ரோட்டின் அருகில் வாறுகாலில் தலையை வீசிச் சென்றனர். அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடிய அருணாசலம் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதற்கிடையே அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், சுப்பையாவின் வீட்டுக்கும் சென்று நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதனால் அந்த வீட்டில் இருந்த சுப்பையாவின் மனைவி சாந்தி, மகள் செல்வி (13) ஆகிய 2 பேரும் அதிர்ச்சி அடைந்து தப்பியோட முயன்றனர். ஆனாலும் அந்த கும்பல், வீட்டுக்குள் புகுந்து சாந்தியை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

இதை தடுக்க முயன்ற செல்விக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த சாந்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இடது கை துண்டாகி தொங்கிய நிலையில் இருந்தது. பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பி சென்றது.

பட்டப்பகலில் ஊருக்குள் வீடுகளில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வீசியும், அரிவாளால் வெட்டியும் 2 பெண்கள் படுகொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதுகுறித்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீலிசா ஸ்டெபி தெரஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

காயம் அடைந்த செல்வியை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சண்முகத்தாய், சாந்தி ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் பழிக்குப்பழியாக சண்முகத்தாய், சாந்தி ஆகிய 2 பேரும் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு.

கொலை செய்யப்பட்ட சண்முகத்தாய்க்கு நம்பிராஜன் உள்பட 3 மகன்கள் இருந்தனர். இந்த நிலையில் நம்பிராஜன், அப்பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன் மகள் வான்மதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் நம்பிராஜன், வான்மதி ஆகிய 2 பேரும் நெல்லை டவுன் மணிபுரம் பகுதியில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி நம்பிராஜனை அவருடைய நண்பர்களான முத்துப்பாண்டி, செல்லத்துரை ஆகியோர் மதுகுடிக்க அழைத்து சென்றனர். பின்னர் நம்பிராஜனை கொலை செய்து, ரெயில்வே தண்டவாளத்தில் வீசிச் சென்றனர்.

இந்த நிலையில் செல்லத்துரையின் தந்தையான ஆறுமுகம் (50) நாங்குநேரி மெயின் ரோடு பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி அவரது ஓட்டலுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கும்பல் ஆறுமுகத்தையும், அவருடைய உறவினரான சுரேசையும் (20) அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.

நம்பிராஜன் கொலைக்கு பழிக்குப்பழியாக ஆறுமுகம், சுரேஷ் ஆகிய 2 பேரும் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இரட்டைக்கொலையில் சுப்பையாவின் மகனும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பினர் நம்பிராஜனின் குடும்பத்தினரையும், சுப்பையாவின் குடும்பத்தினரையும் பழிவாங்க திட்டமிட்டனர். அதன்படி நம்பிராஜன், சுப்பையா ஆகியோரது வீடுகளில் நேற்று மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டு, பெட்ரோல் குண்டுகளை வீசினர். மேலும் வீட்டில் இருந்த சண்முகத்தாய், சாந்தி ஆகிய 2 பேரையும் பழிக்குப்பழியாக படுகொலை செய்தனர்.

தலைமறைவான கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் 4 தனிப்படைகளை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். நெல்லை அருகே பட்டப்பகலில் வீடுகளில் வெடிகுண்டுகள் வீசியும், அரிவாளால் வெட்டியும் 2 பெண்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தலையை துண்டித்து வாறுகாலில் வீசிய கும்பல்
சண்முகத்தாயை கொலை செய்த கும்பல் அவரது தலையை துண்டித்து, சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் மெயின் ரோடு அருகில் உள்ள வாறுகாலில் வீசிச் சென்றது. இதனால் வழிநெடுகிலும் ரத்தக்கறை படிந்தும், மூளை சிதறியும் கிடந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

வெறிச்செயலில் ஈடுபட்ட அந்த கும்பலை சேர்ந்தவர்கள் துணிப்பையில் நாட்டு வெடிகுண்டுகளையும், அரிவாள்களையும் மறைத்து எடுத்து வந்துள்ளனர். அவற்றில் வெடிக்காத சில நாட்டு வெடிகுண்டுகள் அப்பகுதியில் கிடந்தன. அவற்றை போலீசார் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். மேலும் அந்த கும்பல் விட்டு சென்ற 2 அரிவாள்களையும் கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை அருகே 2 பெண்கள் படுகொலை செய்யப்பட்ட பகுதியில் மேலும் ஒரு வெடிகுண்டு சிக்கியதால் பரபரப்பு
நெல்லை அருகே 2 பெண்கள் படுகொலை செய்யப்பட்ட பகுதியில் மேலும் ஒரு நாட்டு வெடிகுண்டு சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. நெல்லை அருகே ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.5¼ லட்சம் நகை-பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
நெல்லை அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டில் ரூ.5¼ லட்சம் நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
3. நெல்லை அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் - அழகான பெண் குழந்தை பிறந்தது
நெல்லை அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
4. நெல்லை அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் கைது
நெல்லை அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மண்டல துணை தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று கையும், களவுமாக கைது செய்தனர்.
5. நெல்லை அருகே தேசிய ஊரக தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
நெல்லை அருகே தேசிய ஊரக தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.