கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை - பெங்களூரு புறநகர் கோர்ட்டு தீர்ப்பு


கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை - பெங்களூரு புறநகர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 27 Sept 2020 5:01 AM IST (Updated: 27 Sept 2020 5:01 AM IST)
t-max-icont-min-icon

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து பெங்களூரு புறநகர் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு அருகே கொடிகேஹள்ளி அருகே வசித்து வருபவர் ஸ்ரத்தா (வயது 28). இவருக்கு திருமணமாகி 2 வயதில் அஞ்சனா என்ற பெண் குழந்தை இருந்தது. தனது கணவருடன் வாழ பிடிக்காமல் ஸ்ரத்தா பிரிந்து விட்டார். அதன்பிறகு, சரத்குமார் என்பவருடன் ஸ்ரத்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஸ்ரத்தாவும், சரத்குமாரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இவர்களது கள்ளத்தொடர்புக்கும், சரத்குமாரை ஸ்ரத்தா 2-வது திருமணம் செய்து கொள்ளவும் குழந்தை அஞ்சனா இடையூறாக இருந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக தனது குழந்தையை கொலை செய்ய ஸ்ரத்தா முடிவு செய்தார். பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி பெற்ற குழந்தை என்று கூட பார்க்காமல் அஞ்சனாவை ஸ்ரத்தா கொலை செய்திருந்தார். பின்னர் குழந்தை கீழே விழுந்து இறந்துவிட்டதாக ஸ்ரத்தா கூறி நாடகமாடினார். ஆனால் குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு கூறினார்கள்.

பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தையின் மூச்சை அமுக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கொடிகேஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரத்தாவை கைது செய்திருந்தனர். கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை கொலை செய்திருந்ததை அவரும் ஒப்புக்கொண்டு இருந்தார். இந்த கொலை வழக்கு பெங்களூரு புறநகர் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததாக பெற்ற குழந்தையை ஸ்ரத்தா கொலை செய்தது உறுதி செய்யப்பட்டு உள்ளதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Next Story