பர்கூரில் இருந்து அந்தியூர் திரும்பிய அரசுபஸ்சில் வந்த பயணிகள் நடுக்காட்டில் தவிப்பு - தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால் போக்குவரத்து துண்டிப்பு
தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால் பர்கூர் மலைக்கிராமத்தில் இருந்து அந்தியூர் திரும்பிய அரசு பஸ்சில் பயணம் செய்த பயணிகள் நடுக்காட்டில் சிக்கி தவித்தனர். இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
அந்தியூர்,
அந்தியூரை அடுத்து பர்கூர் மலைப்பகுதி உள்ளது. பர்கூர் மலையில் அடர்ந்த வனப்பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க அந்தியூருக்கு வந்து செல்வது வழக்கம். இதனால் இங்குள்ள கிராமங்களுக்கு அந்தியூரில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் மலைவாழ் மக்கள் அந்தியூர் சென்று தங்களுடைய கிராமங்களுக்கு திரும்புவர்.
கடந்த சில நாட்களாக பர்கூர் மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள ஓடை மற்றும் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மடம் என்ற மலைக்கிராமத்துக்கு அரசு பஸ் ஒன்று சென்றது. பின்னர் அந்த பஸ் அங்கிருந்து மாலை 5 மணி அளவில் புறப்பட்டது. இந்த பஸ் மடத்தில் இருந்து தேவர்மலை, தாமரைக்கரை வழியாக அந்தியூருக்கு வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். அப்போது பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் அங்குள்ள ஓடை மற்றும் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தாமரைக்கரையை அடுத்த ஈரெட்டி அருகே மாலை 6 மணி அளவில் பஸ் சென்றபோது, அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதுடன், டிரைவரால் பஸ்சை மேற்கொண்டு இயக்க முடியவில்லை. இதன்காரணமாக பயணிகள் தங்களுடைய கிராமத்துக்கும், அந்தியூருக்கும் செல்ல முடியாமல் நடுக்காட்டில் தவித்தனர். இரவு 9 மணி அளவில் காட்டாற்றில் வெள்ளம் முழுவதுமாக வடிந்த பின்னர் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அதன் பின்னரே பயணிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
Related Tags :
Next Story