வனத்துறை அலுவலகத்தில் பறவைகளை கண்முன் நிறுத்தும் ஊசுடு கருத்துக் காட்சி மையம்


வனத்துறை அலுவலகத்தில் பறவைகளை கண்முன் நிறுத்தும் ஊசுடு கருத்துக் காட்சி மையம்
x
தினத்தந்தி 27 Sept 2020 5:59 AM IST (Updated: 27 Sept 2020 5:59 AM IST)
t-max-icont-min-icon

புதுவைக்கு வரும் பறவைகளை கண்முன் நிறுத்தும் விதமாக வனத்துறை அலுவலகத்தில் ஊசுடு கருத்துக் காட்சி மையம் திறக்கப்பட உள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரியின் வேடந்தாங்கலாக விளங்கும் ஊசுட்டேரி தமிழகம்-புதுச்சேரி அரசுகள் சார்பில் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியின் நீராதாரமாகவும் இந்த ஏரி விளங்கி வருகிறது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை வெளிநாட்டில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கத்துக்காக வந்து செல்கின்றன.

குறிப்பாக பிளமிங்கோ, பெலிக்கான் பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றன. இதுதவிர 230 வகையான பறவைகள் இந்த சரணாலயத்தில் வசிக்கின்றன.

இங்கு வசிக்கும் பறவைகள், சிறு விலங்குகளை மக்களுக்கு எடுத்துக் கூறும் விதமாக ரூ.86 லட்சம் செலவில் ஊசுடு கருத்துக்காட்சி மையம் புதுவை-கடலூர் சாலையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த கருத்து காட்சி மையத்தில் பறவைகள் மற்றும் விலங்குகளின் உருவங்கள் கெரோ சிமெண்ட் மூலம் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. பறவைகளும் ஓவியங்களாக வரையப்பட்டு வருகிது.

ஊசுடு ஏரியின் இயற்கை அழகினை நம் கண்முன்னே தத்ரூபமாக கொண்டு வரும் வகையில் இந்த பணிகள் நடந்து வருகின்றன. இந்த கருத்துக் காட்சி மையத்தில் செயற்கையாக வடிவமைக்கப்பட்ட விலங்குகள் உருவங்கள், பறவைகளின் ஓவியங்கள் வைக்கப்பட உள்ளன.

அங்கேயே ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம் குறித்து 20 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ படமும் காட்டப்பட உள்ளது. இந்த கருத்துக் காட்சி மையத்தின் பணிகள் அனைத்தும் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளன. வருகிற 30-ந்தேதி இந்த மையத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி பணிகள் அனைத்தும் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.

Next Story