5 மாதங்களுக்கு பிறகு நடந்த குறைகேட்பு கூட்டம்: ‘கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை’ - விவசாயிகள் வலியுறுத்தல்
விழுப்புரம் மாவட்டத்தில் 5 மாதங்களுக்கு பிறகு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாயிகள், கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறாமல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறைகேட்பு கூட்டம் நடத்த அரசு அனுமதியளித்ததன் பேரில் 5 மாதங்களுக்கு பிறகு நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், வேளாண் இணை இயக்குனர் ராஜசேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பிரபாகரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) ஜவஹர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-
வேளாண் துறையில் உரம், பூச்சிமருந்து ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தரமான விதைகள், உரங்கள் இருப்பில் உள்ளதா? என்று அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். தோட்டக்கலைத்துறையில் மாடித்தோட்ட விதைகளை சரியாக வழங்குவதில்லை. கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், திருக்கோவிலூருடன் நின்றுவிட்டது. எல்லீஸ்சத்திரம், தளவானூர் அணைக்கட்டு வரை தண்ணீர் வந்தால்தான் மலட்டாறுக்கு தண்ணீர் வரும். எனவே இதற்கு இடைப்பட்ட பாதையில் உள்ள நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.
அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல்லுக்கு போதிய விலை கிடைப்பதில்லை, அதுபோல் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் தாமதம் செய்கின்றனர். உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். அதேநேரத்தில் இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விவசாயிகள் அதிகளவில் வந்து செல்வதால் அங்குள்ள வளாகத்தில் அம்மா உணவகம் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மழைக்காலம் தொடங்குவதற்குள் ஏரி, வரத்து வாய்க்கால்களை முறையாக சீர்செய்ய வேண்டும். மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்மலையனூர் பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு 2017-18-ம் ஆண்டுக்கான கரும்பு இன்சூரன்ஸ் இன்னும் வழங்கப்படவில்லை. அதனை விரைந்து வழங்க வேண்டும்.
பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் பலருக்கு இன்னும் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. அதனை விரைந்து வழங்க வேண்டும். திருவண்ணாமலை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பணிக்காக திண்டிவனம் சாலையில் உள்ள ஏரியில் இருந்து விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி மண் எடுக்கின்றனர். தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் ஏரிக்கு தண்ணீர் வரும்பட்சத்தில் மதகு வழியாக தண்ணீர் வராது, இதனால் பயிர்களுக்கும் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. எனவே ஏரியில் மண் அள்ளுவதை நிறுத்த வேண்டும். விவசாய பயன்பாட்டுக்கு தடையின்றி போதிய உரங்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.
இதற்கு பதிலளித்து கலெக்டர் அண்ணாதுரை பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட கழுவேலி ஏரியை சீர்செய்து தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தவும், விவசாய நிலங்களுக்கு தேவையான நீர் ஆதாரத்தை பெருக்கிடும் நோக்கிலும் கழுவேலி ஏரியில் கடல்நீர் உட்புகாத வண்ணம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வீடூர் அணை தூர்வாரும் பணியும் நடைபெற உள்ளது என்றார்.
மேலும் அவர் பேசுகையில், மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு எங்கும் இருக்கக்கூடாது. தனியார் உரக்கடைகளில் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து உரங்கள், விவசாயிகளுக்கு போய் சேருகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். கிசான் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் அல்லாத தகுதியற்றவர்கள் பெற்ற பணம், அவரவர் வங்கி கணக்கு மூலம் திரும்ப பெறும் பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்தில் முறைகேடாக சேர்ந்து பணம் பெற்ற அனைவரிடம் இருந்தும் முழுமையாக வசூல் செய்யப்படும். அதுபோல் இக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார்.
Related Tags :
Next Story