வீரதீர செயல்புரிந்த பெண் குழந்தைகள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தகவல்
வீரதீர செயல்புரிந்த பெண் குழந்தைகள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடலூர்,
தமிழக அரசு, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மூலம் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணங்கள் தடுத்தல் மற்றும் தவிர்த்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் 5 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் மாநில விருது வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்ற செயல்களில் சாதித்தவர்களுக்கும், சிறப்பான செயல்கள் மற்றும் தனித்துவமான சாதனைகள் செய்துள்ள குழந்தைகளுக்கும் தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி 24-ந்தேதி) இவ்விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில் 2021-ம் ஆண்டு தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில விருது வழங்கிட 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு 31.12.2020 அன்றைய தேதியின் படி 18 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். இதில் விருது பெறும் குழந்தைக்கு பாராட்டு பத்திரமும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படும்.
இந்த விருது பெற விரும்பும் பெண் குழந்தைகள் விருதிற்கான விண்ணப்பங்களை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலமாக மாவட்ட சமூக நல அலுவலர், அரசு சேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம், மெயின் ரோடு, கடலூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி கடைசி நாளாகும். இந்த விண்ணப்பங்களை கூர்ந்தாய்வு செய்து, மாவட்ட கலெக்டர் பரிந்துரையுடன் சமூக நல ஆணையரகத்திற்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும். பின்னர் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில அளவில் தேர்வு குழு மூலம் பரிசீலனை செய்யப்பட்டு, அனைத்து தகுதிகள் பெற்ற ஒரு பெண் குழந்தை தேர்வு செய்யப்பட்டு 24.1.2021 அன்று மாநில விருது வழங்கப்படும். எனவே வீரதீர செயல்புரிந்து வரும் பெண் குழந்தைகள் இவ்விருது பெற விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story