பயோமெட்ரிக் எந்திரம் செயல்படாததால் மண்வயல் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் தவிப்பு
பயோமெட்ரிக் எந்திரம் செயல்படாததால் மண்வயல் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டத்தில் தொலைத்தொடர்பு சேவைகள் சரிவர நடைபெறுவதில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் எந்திரங்கள் மூலம் கை விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்காமல் உள்ளனர். இதனிடையே நடப்பு மாதம் முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ளது. இதனால் இம்மாதம் பொருட்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற கவலையில் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.குறிப்பாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தொலைத்தொடர்பு அலைவரிசை சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை பொது மக்கள் தினமும் ரேஷன் கடைகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
கூடலூர் அருகே மண் வயல் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் நேற்று அதிக அளவு வந்து இருந்தனர். அப்போது அலைவரிசை சேவை சரிவர கிடைக்காததால் பயோமெட்ரிக் எந்திரம் செயல்பட வில்லை. காலை 8.30 மணிக்கு ரேஷன் கடை திறக்கப்பட்ட நிலையில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் பயோமெட்ரிக் எந்திரத்தில் தங்களது விரல் ரேகையை பதிவு செய்ய முயன்றனர். ஆனால் அலைவரிசை சிக்னல் சரியாக கிடைக்காததால் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் பல மணி நேரம் ரேஷன் கடை முன்பு காத்து கிடந்தனர். பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், அன்றாடப் பணிகளை விட்டு ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வருகிறோம். இந்த நிலையில் தற்போது பயோ மெட்ரிக் முறை உள்ளதால், அலைவரிசை சேவை கிடைக்க வில்லை என்று அலைக்கலைக்கின்றனர். இதனால் பொருட்கள் வாங்க முடியவில்லை. இதனால் பழைய நடைமுறையில் பொருட்கள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் இம்மாதம் வழங்க வேண்டிய பொருட்களை அடுத்த மாதமும் பெற்றுக்கொள்ள கால அவகாசம் வழங்க வேண்டும் என்றனர். இதேபோல் கூடலூர் பகுதியில் உள்ள ஆதிவாசி மக்களும் பொருட்கள் வாங்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
Related Tags :
Next Story