3 மாதமாக தேடப்பட்டு வந்த நிலையில் கோவையை கலக்கிய டவுசர் கொள்ளையர்கள் 2 பேர் கைது - 10 பவுன் நகைகள் மீட்பு


3 மாதமாக தேடப்பட்டு வந்த நிலையில் கோவையை கலக்கிய டவுசர் கொள்ளையர்கள் 2 பேர் கைது - 10 பவுன் நகைகள் மீட்பு
x
தினத்தந்தி 27 Sept 2020 4:00 AM IST (Updated: 27 Sept 2020 9:43 AM IST)
t-max-icont-min-icon

3 மாதமாக தேடப்பட்டு வந்த நிலையில் கோவை கலக்கிய டவுசர் கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சூலூர், 

கோவை சிங்காநல்லூர், முத்துக்கவுண்டன் புதூர், சூலூர், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதுதொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையில் சில இடங்களில் டவுசர் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டினர். ஆனாலும் அவர்கள் போலீசில் சிக்காமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சிங்காநல்லூர் பகுதியில் டவுசர் கொள்ளையர்களில் வீரமணி (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் கோவை சூலூரை அடுத்த பட்டணம்புதூரை சேர்ந்த பிரபு (31) என்ற தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து பிரபு சூலூர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை (கண்காணிப்பு கேமரா) ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையடிக்கப்பட்ட நேரத்தில் டவுசர் கொள்ளையர்கள் 3 பேர் அந்த பகுதியில் நடமாடியது தெரியவந்தது.

இந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் டவுசர் கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்கள் தொடர்ந்து கோவை, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கருமத்தம்பட்டி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டிராஜ், ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நேற்று சூலூர் சந்தைப்பேட்டை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் நடத்தி கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர்கள் நீலகிரி மாவட்டம் குதுர அம்பம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் நாகராஜ் (23), திருமங்கலத்தை சேர்ந்த பாபு என்பவரது மகன் சிவன் (22) என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த 3 மாதங்களாக கோவையில் இரவு நேரங்களில் டவுசர் அணிந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் சிவன் என்பவர் கோவையில் கைது செய்யப்பட்ட டவுசர் கொள்ளையன் வீரமணியின் தம்பி என்பதும், இவர்கள் 3 பேரும் சேர்ந்து தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து நாகராஜ், சிவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர்களுக்கு பெரியநாயக்கன்பாளையம், கருமத்தம்பட்டி, சூலூர், துடியலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. மேலும் கைது செய்யப்பட்ட நாகராஜ், சிவனிடம் இருந்து 10 பவுன் தங்க நகைகளை சூலூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடந்த 3 மாதத்துக்கு மேலாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து, கோவையை கலக்கி வந்த டவுசர் கொள்ளையர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

Next Story