நீலகிரியில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பூங்காக்களுக்கு சுற்றுலா பயணிகள் 7,800 பேர் வருகை


நீலகிரியில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பூங்காக்களுக்கு சுற்றுலா பயணிகள் 7,800 பேர் வருகை
x
தினத்தந்தி 27 Sept 2020 3:45 AM IST (Updated: 27 Sept 2020 10:14 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பூங்காக்களுக்கு சுற்றுலா பயணிகள் 7 ஆயிரத்து 800 பேர் வருகை தந்துள்ளனர்.

ஊட்டி, 

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் மூடப்பட்டன. 5 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் அரசுக்கு ரூ.20 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அரசு அனுமதியின் பேரில் நீலகிரியில் தோட்டக்கலை பூங்காக்கள் மட்டும் கடந்த 9-ந் தேதி முதல் திறக்கப்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, கல்லார் தோட்டக்கலை பூங்கா ஆகிய பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன.

வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா வருவதற்காக தினமும் 100 இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இ-பாஸ் விண்ணப்பிக்கும்போது எத்தனை நாள் தங்குகின்றனர் என்ற விவரத்தை உள்ளீடு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இ-பாசை காண்பித்து தங்கும் விடுதிகள், காட்டேஜ்களில் தங்கி கொள்ளலாம். இந்த நிலையில் நீலகிரியில் உள்ள பூங்காக்களில் சுற்றுலா பயணிகள் ஒரு மணிநேரம் மட்டும் சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுகிறது. இதை மீறினால் நுழைவு கட்டணம் அபராதமாக விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும்அறிவுறுத்தப்படுகிறது.

இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் திறக்கப்பட்டாலும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்த அளவே காணப்படுகிறது. இதற்கு காரணம் தொடர்ந்து இ-பாஸ் நடைமுறை இருப்பதே ஆகும். தற்போது வெளி மாவட்டங்களில் இருந்து பொதுமக்களும், அரசு அலுவலர்களும் விடுமுறை நாட்களில் தங்களது குடும்பத்தினருடன் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அதிகபட்சமாக ஒரே நாளில் சுற்றுலா பயணிகள் 803 பேர் பூங்காக்களை கண்டு ரசித்து உள்ளனர். கடந்த 18 நாட்களில் பூங்காக்களுக்கு 7,800 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். ஊரடங்கால் வீடுகளில் முடங்கி இருந்தவர்கள், தளர்வுக்கு பிறகு மன அழுத்தத்தை போக்கவும், இயற்கை அழகை கண்டு ரசிக்கவும் ஊட்டிக்கு வருவதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். ஊட்டி தாவரவியல் பூங்காவில் 7 ஆயிரம் பூந்தொட்டிகள் மலர் மாடத்தில் காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதோடு, புகைப்படம் எடுத்தும், குடும்பத்தினருடன் செல்பி எடுத்தும் மகிழ்கிறார்கள். பூங்காவில் தொடர் மழையால் சில மலர்கள் அழுகி வருகின்றன. அழுகிய மலர்களை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக வேறு பூந்தொட்டிகளை பணியாளர்கள் அடுக்கி வைக்கின்றனர். பூங்கா நுழைவு வாயிலில் மேரிகோல்டு மலர்கள் பூத்து குலுங்கி வரவேற்கிறது. அந்த அலங்காரம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது.

Next Story