தேனி அல்லிநகரத்தில் பாலத்தை அகற்றாமல் ஓடையை தூர்வார எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்
தேனி அல்லிநகரத்தில் பாலத்தை அகற்றாமல் ஓடையை தூர்வாரும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி,
தேனி அல்லிநகரம் வெங்கலாநகரில் தொடங்கி அண்ணாநகர், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் அலுவலகம் ஆகியவற்றை கடந்து மீறுசமுத்திரம் கண்மாய் வரை நீரோடை அமைந்துள்ளது. வெங்கலாநகர் மற்றும் அல்லிநகரம் பகுதிகளில் பெய்யும் மழைநீர் இந்த ஓடை வழியாக கண்மாய்க்கு சேரும். அண்ணாநகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் இந்த ஓடை சென்றதால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஓடையின் மேல் நீண்ட பாலம் கட்டப்பட்டது. இந்த பாலமே அந்த பகுதி குடியிருப்புகளுக்கான தெருப்பாதையாக உள்ளது.
இந்த நீரோடையில் சாக்கடை கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டது. இதனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஓடையை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதையொட்டி அண்ணாநகரில் பாலத்துக்கு கீழ் தேங்கிக் கிடக்கும் சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாநகரை சேர்ந்த மக்கள் நேற்று திடீரென பணிகள் நடக்கும் இடத்தில் திரண்டனர். அவர்களுடன் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமையில் நிர்வாகிகள் சிலரும் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பழமையான இந்த பாலத்தை முழுவதும் அகற்றிவிட்டு, ஓடையை முழுமையாக தூர்வார வேண்டும் என்றும், தூர்வாரிவிட்டு மீண்டும் புதிய பாலம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் தலைமையில் அதிகாரிகளும், அல்லிநகரம் போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நீண்டகாலத்துக்கு பிறகு தூர்வாரும் பணி நடப்பதால் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர். மேலும் பாலத்தை முழுமையாக அகற்றும் போது அருகில் உள்ள வீடுகள் சேதம் அடைய வாய்ப்புள்ளதாகவும், யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பழைய பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story