பெரம்பலூரில் கலெக்டர் அலுவலகத்தை விவசாய தொழிலாளர்கள் முற்றுகை- ஆர்ப்பாட்டம்


பெரம்பலூரில் கலெக்டர் அலுவலகத்தை விவசாய தொழிலாளர்கள் முற்றுகை- ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2020 2:51 PM IST (Updated: 27 Sept 2020 2:51 PM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலையின்போது டிராக்டர் மோதி இறந்த பெண் தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திம்மூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் (100 நாள் வேலை) சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்ட டிராக்டர் மோதியதில், அங்கு வேலை பார்த்த தொழிலாளியான அதே பகுதியை சேர்ந்த சீனிவாசனின் மனைவி ஜெயலட்சுமி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு நிவாரணமாக தமிழக அரசு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். ஜெயலட்சுமியின் கணவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவர்களது 2 மகன்களின் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும். டிராக்டர் பயன்படுத்திட அனுமதி தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் திம்மூர் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், ஊராட்சி செயலாளர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்திட வேண்டும்.

100 நாள் வேலையில் பயன்படுத்தப்பட்ட எந்திரங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று காலை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோஷங்களை எழுப்பினர்

போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சின்னதுரை, அரியலூர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான லாசர் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தர, மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, விவசாய தொழிலாளர்கள் விடுதலை இயக்கத்தின் மாநில செயலாளர் வீர.செங்கோலன், மாவட்ட செயலாளர்கள் மணிவேல் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ஞானசேகரன் (இந்திய கம்யூனிஸ்டு), ம.தி.மு.க. அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் துரைராஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், ஜெயலட்சுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் திம்மூர் கிராம மக்களும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் வழங்கினர்.

Next Story