போட்டோ ஸ்டூடியோ உரிமையாளருக்கு வெடிபொருட்கள் அனுப்பிய 2 பேர் கைது


போட்டோ ஸ்டூடியோ உரிமையாளருக்கு வெடிபொருட்கள் அனுப்பிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Sept 2020 5:52 PM IST (Updated: 27 Sept 2020 5:52 PM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலத்தில் போட்டோ ஸ்டூடியோ உரிமையாளருக்கு கொரியர் பார்சலில் வெடிபொருட்கள் அனுப்பிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நீடாமங்கலம்,

நீடாமங்கலம் புதுத்தெருவில் வசித்து வருபவர் வீரக்குமார் (வயது 40). இவர் நீடாமங்கலம் அப்பாவு பத்தர் சந்து பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவருக்கு திருச்சியில் இருந்து கொரியர் பார்சல் கடந்த 18-ந் தேதி வந்தது. இந்த பார்சல் திருச்சி தென்னூர் ஹைரோடு 10-சி வெள்ளாத்தெரு, சி.கார்த்திரப்பன் என்ற விலாசத்தில் இருந்து வந்துள்ளது. இந்த பார்சலை பெற்ற வீரக்குமாரை அதனை பிரிக்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தினர்.

பின்னர் குற்றப்பிரிவு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சம்மந்தப்பட்ட பார்சலை ஆய்வு செய்தனர். பார்சலை பிரித்து பார்த்ததில் பேட்டரி அல்லது மின் இணைப்பில் வெடிக்க கூடிய ஜெலட்டின் குச்சி 1, 125 கிராம் எடை கொண்ட டெட்டனேட்டர் 1 இருந்ததை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இந்த மாதிரியான வெடி பொருட்கள் மிகப்பெரிய பாறைகளை பிளக்கும் சக்தி வாய்ந்தது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

நிதி நிறுவனம் மீது சந்தேகம்

உடனடியாக போலீசார் வீரக்குமாரிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் விசாரணை நடத்தியதில் தனக்கும் பார்சலுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. திருச்சியில் உள்ள நிதி நிறுவனம் மீது சந்தேகம் உள்ளது என்றார். உடனே அந்த பார்சலில் உள்ள வெடி பொருட்களை எடுத்து நீடாமங்கலம் காவல் நிலையத்தில் மணல் நிரப்பிய பிளாஸ்டிக் பக்கெட்டில் பத்திரமாக பாதுகாப்பில் வைத்தனர். இதனால் நீடாமங்கலத்தில் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நீடாமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 18-ந் தேதி இதேபோல் தஞ்சை மாவட்டம் கண்ணந்தங்குடி மேலையூர் வடக்கு தெருவை சேர்ந்த என்ஜினீயர் அறிவழகன் (28) என்பவருக்கு வந்த கொரியரில் வெடி குண்டுகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதனை போலீசார் கண்டறிந்து விசாரணை நடத்தியதின் அடிப்படையில் நீடாமங்கலத்திற்கும் கொரியர் பார்சல் வந்ததை கண்டறிந்தனர்.

2 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவின் பேரில் நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா தலைமையிலான தனிப்படை போலீசார் வெடிபொருட்கள் அனுப்பிய மர்ம நபர்களை தேடி வந்தனர். போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா பூவாத்திரக்குடி கிராமத்தை சேர்ந்த கருப்பையா மகன் சத்தியமூர்த்தி (35), தஞ்சை அருளானந்த நகர் பகுதியை சேர்ந்த அமீர் சையது என்கிற அமிர்தராஜ் (48) ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் 2 பேரும் வெடிபொருட்களை அனுப்பியதை ஒப்புக் கொண்டனர். மேலும் திருச்சி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்து போனதாகவும் தெரிவித்தனர். நிதி நிறுவனத்தினரை சிக்க வைக்க வெடிபொருட்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியமூர்த்தி மற்றும் அமீர்சையது என்கிற அமிர்தராஜ் ஆகிய 2 பேரை நேற்று மாலை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னையை சேர்ந்த சரவணன் உள்பட மேலும் பலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story