கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர் பயிற்சி மாணவிகள் திடீர் தர்ணா பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்


கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர் பயிற்சி மாணவிகள் திடீர் தர்ணா பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Sept 2020 7:48 PM IST (Updated: 27 Sept 2020 7:48 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் பட்டயப்பயிற்சி மாணவிகள் தங்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் திடீரென தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் ஆசிரியர் பட்டயப்பயிற்சி படித்து வரும் மாணவிகள் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு திரளாக வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து தர்ணாவில் ஈடுபட்ட மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியர் பட்டயப்பயிற்சி பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கோரிக்கை தொடர்பாக முறையாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் வலியுறுத்த வேண்டுமே தவிர, இவ்வாறு திடீர் போராட்டம் நடத்த கூடாது என்று போலீசார் அறிவுரை வழங்கியதோடு எச்சரிக்கையும் விடுத்தனர்.

மனு

இதனையடுத்து மாணவிகள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாங்கள் ஆசிரியர் பட்டயப்பயிற்சி படித்து வருகிறோம். நாங்கள் பல முறை கோரிக்கை வைத்தபிறகும் அதை பொருட்படுத்தாமல் தமிழ்நாடு கல்வித்துறை ஆசிரியர் பட்டயப்பயிற்சி பொதுத்தேர்வை கடந்த 21-ந் தேதி முதல் நடத்தி வருகிறது. இதனால் மாணவிகளில் பலர் காய்ச்சலுடன் தேர்வை எழுதுகிறார்கள். எனவே உயிர் பயம் காரணமாக எங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. கொரோனா தொற்று வழிகாட்டுதலின்படி பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் தற்போதைய காலகட்டத்தில் எங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படுகிறது. சில பல்கலைக்கழக தேர்வு ஆன்லைன் மூலமாக நடக்கிறது. அதே மாதிரி எங்களுக்கு நடத்தவில்லை.

தேர்வை ரத்து செய்ய...

எங்களுக்கு மட்டும் நேரடியாக மையத்துக்கு வந்து தேர்வு நடத்தப்படுகிறது. அதிலும் மாவட்டத்துக்கு ஒரு தேர்வு மையம் தான் உள்ளது. விடுதி வசதியும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வுகள் தொடர்ச்சியாக 14 நாட்கள் நடக்கிறது. இதனால் பல மாணவிகள் தினமும் 100 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டி இருக்கிறது. கிராம புறங்களில் பொது போக்குவரத்து சரிவர இல்லாததால் மாணவிகளால் தேர்வுக்கு சரியான நேரத்தில் வரமுடியாமல் போகிறது.

எனவே இவற்றை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வை ரத்து செய்து எங்களுடைய உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story