புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 27 Sep 2020 3:52 PM GMT (Updated: 27 Sep 2020 3:52 PM GMT)

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம்,

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாக கருதப்படுவதால் அந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் விரதம் இருந்து வைணவ தலங்களுக்கு செல்வது வழக்கம். அதன்படி புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையான நேற்று சேலத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் அழகிரிநாதர் மற்றும் சுந்தரவல்லி தாயாருக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது.

இதேபோல் உற்சவர் அழகிரிநாதர் பெருமாளுக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களின் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகிரிநாதர் வைரகிரீட அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை முதலே கோவிலில் திரண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முககவசம் மற்றும் சமூக இடைவெளியுடன் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

வெள்ளிக்கவச அலங்காரம்

இதேபோல் சேலம் பட்டைக்கோவில், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், கடைவீதியில் உள்ள வேணுகோபால சாமி கோவில், ஆனந்தா இறக்கம் பகுதியில் உள்ள லட்சுமி நாராயண சாமி கோவில்களிலும் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி நேற்று காலை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் சேலம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தனிமனித இடைவெளியில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சேலம் செவ்வாய்பேட்டை சென்றாய பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.

பின்னர் ஆஞ்சநேயர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேலம் சின்ன திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி நேற்று காலை சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. இதில் சின்னதிருப்பதி, மணக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் உடையாப்பட்டி சென்றாய பெருமாள் கோவில், நெத்திமேடு கரியபெருமாள் கோவில், கூசமலையில் உள்ள பெருமாள் கோவில் உள்ளிட்ட சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.

சங்ககிரி

சங்ககிரி அருகே தேவண்ணகவுண்டனூர் கிராமத்தில் உள்ள மங்கமலை பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி 3 கால பூஜை நடந்தது. சாமிக்கு பூ மாலை, மஞ்சள், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பிறகு மாலை திருக்கோடி ஏற்றப்பட்டது.

Next Story