தூத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் பறிமுதல் 4 பேர் கைது


தூத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் பறிமுதல் 4 பேர் கைது
x
தினத்தந்தி 28 Sept 2020 4:45 AM IST (Updated: 27 Sept 2020 10:33 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்புத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் தங்கம் (வயது 55). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரை நன்கு அறிந்த தூத்துக்குடி ராஜபாளையத்தை சேர்ந்த மரியதாஸ் (49), கதிர்வேல்நகரை சேர்ந்த முருகன் (47) ஆகியோர் சந்தித்து பேசினர்.

அப்போது தங்கத்திடம், சிவகங்கை மாவட்டம் கண்டனூரை சேர்ந்த வைத்தியலிங்கம் (60), முதுகுளத்தூர் புளியங்குடியை சேர்ந்த முத்துராமலிங்கம் (45) ஆகியோர் இரிடியம் என்ற மதிப்புமிக்க பொருள் இருப்பதாகவும், அதனை விற்பனை செய்ய வேண்டும் என்றும் கூறி உள்ளனர். மேலும் விற்று கொடுத்தால் நல்ல கமிஷன் கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம், எட்டயபுரம் சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த மரியதாஸ், முருகன் ஆகியோர் தங்கத்தை அழைத்து உள்ளனர். அவர் அருகில் சென்றதும், சிறிது தூரத்தில் நின்று கொண்டு இருந்த காருக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்தியலிங்கம், முத்துராமலிங்கம் ஆகிய 2 பேரும் இருந்தனர். அவர்களிடம் தங்கத்தை அறிமுகப்படுத்தி வைத்தனர்.

பின்னர் இரிடியத்தை காண்பிக்குமாறு தங்கம் கூறினார். அப்போது ஒரு பெட்டியில் 6 பிளாஸ்டிக் டப்பாக்கள் இருந்தன. அதன் நடுவே பேட்டரி பொருத்தப்பட்டு இருபுறமும் ரப்பர் கார்க் கொண்டு அடைக்கப்பட்டு இருந்தது. பேட்டரியை சுற்றி திரவம் நிரப்பப்பட்டு இருந்தது. இதனை பார்த்த தங்கம் திரவ நிலையில் இரிடியம் இருந்ததால் சந்தேகம் அடைந்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 4 பேரும் சேர்ந்து தங்கத்தை மிரட்டினர்.

இதுகுறித்து அவர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் மற்றும் போலீசார், வைத்தியலிங்கம், முத்துராமலிங்கம், மரியதாஸ், முருகன் ஆகிய 4 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்டு இருந்த 144 மில்லி திரவ நிலையிலான இரிடியம் போன்ற பொருள், இரிடியம் குறித்த விவரம் அடங்கிய சி.டி., அரிவாள் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட முத்துராமலிங்கம் அ.ம.மு.க. பிரமுகர் ஆவார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பார்வையிட்டு, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

இரிடியம் வைத்து இருந்ததாக கைது செய்யப்பட்டவர்கள், டப்பாக்களில் இருப்பது இரிடியம் என்று கூறியுள்ளனர். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறியுள்ளனர். இந்த இரிடியத்தை இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு ஆணையத்தில் காணாமல் போன இரிடியம் என்றும் தெரிவித்து உள்ளனர். ஆகையால் திரவ நிலையில் உள்ள பொருள் இரிடியம் தானா? என்பதை பரிசோதனை செய்வதற்காக சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன்பிறகே அதன் மதிப்பு உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும். அதே நேரத்தில் மதிப்புமிக்க பொருள் என்று நம்ப வைப்பதற்காக இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு ஆணையத்தில் காணாமல் போன இரிடியம் என்று கூறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறோம். பொதுமக்களிடம் கோபுர கலசம், மண்ணுளி பாம்பு, இரிடியம் போன்றவற்றை ஏமாற்றி விற்கும் கும்பல் நடமாடுகிறது. இதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) அபிஷேக் குப்தா, துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story